நிர்மலா தேவி மீது முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் நிர்மலா தேவி உள்ளிட்டோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலா தேவி, அங்கு பயிலும் மாணவிகளை செல்போனில் பேசி பாலியல் பாதைக்கு அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் நிர்மலா தேவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நிர்மலா தேவி உள்ளிட்ட மூன்று பேரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
1,160 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. முத்து சங்கரலிங்கம் தாக்கல் செய்தார். நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சாரம் தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்ப பரிமாற்ற முறைகேடு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மாணவிகளிடம் பேசியது தொடர்பாக, நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட குரல் மாதிரி பரிசோதனையின் முடிவுகள் கிடைத்த பிறகு, இறுதி மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று, சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர்.