கோப்புகள் வெறும் காகிதங்கள் அல்ல: ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

கோப்புகள் வெறும் காகிதங்கள் அல்ல: ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

கோப்புகள் வெறும் காகிதங்கள் அல்ல: ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
Published on

கோப்புகள் வெறும் காகிதங்கள் அல்ல, அதன் பின்னணியில் தனி மனித வாழ்க்கை இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோப்புகள் தேங்கா வண்ணம் விரைவாகவும், உடனடியாகவும் அவற்றிக்குத் தீர்வுக் காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையில் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாநாட்டின் இரண்டாவது நாளில்,‌ மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதலமைச்சர், அரசின் அனைத்து நலத்திட்டங்களையும், நலிந்த நிலையில் இருப்பவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஆட்சியர்கள் முழு முனைப்புடன் கண்காணித்திட வேண்டும் என்று கூறினார். தமிழக அரசுப் பள்ளிக் கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரிக்க வேண்டும் என்றும் இடைநிற்றல் அறவே தடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான ந‌டவடிக்கைகளை ஆட்சியர்கள் எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

பள்ளிகளில் இயங்கி வரும் சத்துணவு மையங்கள், குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்கள் சரியான முறையில் இயங்குகின்றனவா என்பதையும், இந்த மையங்கள் குடிநீர் , மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன் குறைகளின்றி இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலனுக்காக தொடங்கப்பட்டுள்ள, கட்டணமில்லா வண்டல் மண் வழங்கும் திட்டத்தினை மேலும் சிறப்பாக செயல்படுத்த ஆட்சியர்கள் பாடுபட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனி‌சாமி அறிவுறுத்தினார். 

நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய, தேவையான தொடர் ஆய்வுகளை ஆட்சியர்கள் மேற்கொள்ளுமாறும், கோடைக்காலத்திலும் குடிநீர் பிரச்னை இல்லை என்ற நிலையினை உறுதி செய்யுமாறும் ஆட்சியர்களை கேட்டுக்கொண்டார். கோப்புகள் என்பது வெறும் காகிதங்கள் அல்ல, அவற்றின் பின்னணியில் தனி மனித வாழ்க்கையோ, பிரச்னைகளோ அல்லது சமுதாய திட்டங்களோ உள்ளன என்றும், அதனால் கோப்புகள் தேங்கா வண்ணம் விரைவாகவும், உடனடியாகவும் அவற்றிக்கு தீர்வுக் காண வேண்டும் என அறிவுறுத்தினார். அனைத்து மனுக்களின் மீதும் தனி கவனம் செலுத்தி, ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதன் மூலம், அரசின் மீது பொதுமக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் ஆட்சியர்கள் ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com