பரோட்டாவில் முகக்கவசம்.. விழிப்புணர்வில் அசத்தும் மதுரை உணவகம்..!
மதுரையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு மக்ககளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபல தனியார் உணவகம் ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம் கொரோனா குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மிகத்தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அரசு ஒரு புறம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வர, மதுரையில் உள்ள தன்னார்வலர்களும் மக்களுக்கு உதவியும், வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வந்தனர்.
அந்த வரிசையில் தற்போது மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள பிரபல உணவகமும் சேர்ந்து விட்டது. அப்படி என்ன செய்தது என்று கேட்கிறீர்களா, சம்பந்தப்பட்ட உணவகம் பரோட்டாவிலே முக கவசம் தயாரித்து விற்பனை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்த முகக்கவசங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து உணவகம் சார்பில் கூறும் போது “ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த பரோட்டோ முககவசங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தனர்.