தருமபுரி: மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை - மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வன அதிகாரிகள்
தருமபுரி மாவட்டம் ஏரியூர் காவிரி ஆற்று பகுதியில் இரண்டு வாரங்களாக விவசாய நிலங்களை நாசம் செய்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே உள்ள பதனவாடிகாப்புக்காடு மற்றும் காவிரி ஆற்று பகுதியில் சுமார் 20 வயதுடைய காட்டு யானை ஒன்று கடந்த இரண்டு வாரங்களாக ஆற்றில் தண்ணீர் குடிக்க வருவதும், அந்தப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களையும் சேதப்படுத்துவதுமாக இருந்து வந்தது. இதுமட்டுமன்றி இரவு நேரங்களில் கிராமங்களுக்கு நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று தருமபுரி மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான வனத்துறையினர் முகாமிட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்தனர். அதனைத்தொடர்ந்து ஓசூர் மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், காலை 8 மணிக்கு யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
ஊசி செலுத்திய 5 மணி நேரத்திற்கு பிறகு யானை மயங்கியது. அதனைத்தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் உதவியுடன், யானையை லாரியில் ஏற்றினர். தொடர்ந்து பாதுகாப்பாக பிடிக்கப்பட்ட ஆண் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட யானையை தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் விடுவிக்கவுள்ளனர்.