தனியார் விடுதி கழிவுநீர் தொட்டியில் சிக்கி 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிர் இழப்பு.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள பொக்காபுரம் பகுதியில் செயல்படும் தனியார் தங்கும் விடுதி உள்ளது. அங்கிருக்கும் கழிவுநீர் தொட்டியில் கால் சிக்கிய நிலையில் ஆண் யானை இறந்து கிடப்பது காலை தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இறந்த ஆண் யானைக்கு சுமார் 5 வயது இருக்கும் என்று தெரிவித்தனர்.
இந்தத் தனியார் விடுதிக்கு நேற்று இரவு சுமார் 2 மணியளவில் வந்த அந்த யானை கழிவு நீர் தொட்டியில் முன்னங்கால்கள் சிக்கிய நிலையில், அதிலிருந்து மீண்டு வந்துள்ளது. பின்னர் அந்த யானையின் பின்னங்கால் மீண்டும் கழிவுநீர் தொட்டியில் சிக்கியுள்ளது. அதிலிருந்து வெளிவர அந்த யானை போராடிய போது உயிர் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தனியார் விடுதி சமையல் அறைக்கு மிக அருகில் யானை உயிர் இழந்துள்ள நிலையில், எப்படி அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு தெரியாமல் போனது என கேள்வி எழுந்துள்ளது.

