தண்ணீர் இன்றி அலைந்த பெண் யானை : பாறையில் மயங்கி பரிதாப பலி
ஈரோட்டில் உணவின்றி வெயிலில் மயங்கி பாறை மீது விழுந்த பெண் யானை உயிரிழந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ள தாளவாடி வனப்பகுதியில் தற்போது வறண்ட நிலை ஏற்பட்டுள்ளது. வனக்குட்டைகள் காய்ந்து நீரின்றி செடிகள், கொடிகள் கருகிய நிலையில் உள்ளது. அத்துடன் ஏரிகள், நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டுள்ளதால், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் இன்றி தவிக்கின்றன. மேலும் மரங்கள் அனைத்தும் பசுந்தழைகள் இன்றி இருப்பதால், உணவு, தீவனத்தை தேடி யானைகள் மக்கள் வசிக்கும் இடங்களை நோக்கி வருகின்றன.
இந்நிலையில், தாளவாடி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் யானைகள் இடம்பெயர்ந்து பல்வேறு பகுதிக்கு சென்றுள்ளன. அதில் வயது முதிர்ந்த பெண்யானை ஒன்று உணவு, தண்ணீர் தேடி திரிந்தது. கடந்த சில நாள்களாக உணவு ஏதும் சாப்பிடததால், அந்த யானை குமிட்டாபுரம் என்ற இடத்தில் மயங்கி பாறை மீது விழுந்ததுள்ளது. இந்த சூழலில் கடும் வெயிலில் எழுந்திருக்க முடியாத அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலைவதால், வனத்துறையினர் தாற்காலிகமாக தண்ணீர் தொட்டி அமைத்து அவற்றின் தாகத்தை தீர்க்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

