தேர்தல் ஆணையம் விழிப்புடன் இருக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
வேட்பு மனுக்களை பெறும்போது தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் வயது, வாக்கு இடம்பெற்றுள்ள தொகுதியின் பெயர், எண், வாக்காளர் பட்டியலில் உள்ள எண் மற்றும் வருமானம், சொத்து விவரங்கள், கடன் விவரங்கள், குற்றப் பின்னணி, கல்வி விவரங்களை தெரிவிக்க வேண்டும். ஆனால், 2019 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி.க்களின் வேட்புமனுக்கள் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
முறையாக தாக்கல் செய்யப்படாத அந்த வேட்புமனுக்கள் முறையற்ற வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், நீலகிரி எம்.பி. ராஜா, பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் ஆகியோர் மட்டுமே முறையாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனுக்களை முறையாக தாக்கல் செய்யாத எம்.பி.க்களுக்கு எதிராக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும், வேட்புமனுக்கள் முறையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களில் தொகுதி எண்களை சரியாக குறிப்பிடவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், மனுதாரர் குறிப்பிடும் குறைபாடுகள் நிவர்த்தி செய்த பின் தான் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.