12 ஆயிரத்து 915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிப்பு - தேர்தல் ஆணையம்

12 ஆயிரத்து 915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிப்பு - தேர்தல் ஆணையம்
12 ஆயிரத்து 915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிப்பு - தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 12 ஆயிரத்து 915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் அரசு ஊழியர்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோரின் தபால் வாக்குக்கான விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டதாக வெளியான தகவலின் அடிப்படையில் அரசுப் பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் பதில் மனுத்தாக்கல் செய்தது. 

அதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் என 4 லட்சத்து 35 ஆயிரம் 3 பேருக்கு தபால் வாக்குகளுக்கான படிவங்கள் வழங்கப்பட்டதாகவும், அவற்றில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 200 பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சமர்ப்பிக்கப்பட்ட படிவங்களில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 391 பேரின் வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள தேர்தல் ‌ஆணையம், தொகுதி, பாகம் எண், உள்ளிட்டவற்றை சரியாக குறிப்பிடாத மற்றும் தேர்தல் ஆணைய தரவுகளுடன் பொருந்தாத 12 ஆயிரத்து 915 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளது. 

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் 2 நாட்களில் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டதுடன், வருங்காலங்களில் ‌இதுபோன்ற விடுபடுதல்கள் நடைபெறாத வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தி, வழக்கை முடித்துவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com