அனுமதி இருந்தாலும் பொது இடங்களில் விளம்பரம் செய்யக்கூடாது - தேர்தல் கெடுபிடி
உள்ளாட்சித் தேர்தலுக்காக, தனியார் இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெற்றிருந்தாலும் சுவரில் விளம்பரம் செய்வதோ, படம் வரைவதோ, போஸ்டர் ஒட்டுவதோ கூடாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்காக விளம்பரங்கள் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தேர்தல் நடத்தை விதிகளின் படி, பொது இடங்களில் பதாகைகள், கொடிகள் வைப்பது மற்றும் சுவர் விளம்பரம், சுவரொட்டிகள் ஓட்டுவது தொடர்பான வரையறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு திறந்தவெளிகள் தடுப்புச் சட்டம் 1959ல் பொது இடங்கள் என்பது, ஒருவர் பார்வையில் படும்படியான தனியார் இடம் மற்றும் கட்டடமும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இடங்களில் உரிமையாளர்களின் அனுமதி பெற்றிருந்தாலும் சுவரில் விளம்பரம் செய்யக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதேபோல், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி பயன்படுத்துவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.