"நாங்கள் அடங்கியிருப்போம்... நீங்கள் அடங்கி இருப்பீர்களா?" - சீமான்

"நாங்கள் அடங்கியிருப்போம்... நீங்கள் அடங்கி இருப்பீர்களா?" - சீமான்

"நாங்கள் அடங்கியிருப்போம்... நீங்கள் அடங்கி இருப்பீர்களா?" - சீமான்
Published on

"அமெரிக்காவில் வாக்குப்பதிவு நடத்தி அடுத்த நாளே முடிவை அறிவிக்கிறார்கள். இங்கு எதற்காக அவ்வளவு நாட்கள் அடைத்து வைக்கிறீர்கள். அப்போதே எங்களுக்கு சந்தேகம் வருகிறது. நாங்கள் அடங்கியிருப்போம். நீங்கள் அடங்கி இருப்பீர்களா? என்னவோ நடக்குது" என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இயந்திர வாக்கெடுப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் பழுதாகும். அதனால்தான் அதை கைவிடுங்கள் என்று பலமுறை வலியுறுத்தி வருகிறோம். பல நாடுகள் கைவிட்ட நிலையில், நைஜீரியாவும் இந்தியாவும்தான் பயன்படுத்தி வருகின்றன. எங்கு வாக்குப்பதிவு இயந்திரத்தை தயாரித்தார்களோ அங்கேயே அது பயன்படுத்தப்படுவதில்லை.

நீட் தேர்வில் மூக்குத்திக்குள் வைத்து பிட் எடுத்து சென்றுவிடுவார்கள் என அதை கழட்ட சொல்கிறார்கள். ஆனால் இந்த இயந்திரத்தில் எதுவும் செய்ய முடியாது என நம்ப சொல்கிறது. இதில் தவறு நடக்க வாய்ப்பு இருக்கிறது. வாக்குச் சீட்டை வைத்துதான் வாக்குபதிவு நடத்த வேண்டும். தேர்தல் ஆணையமே ஒரு நாடக கம்பெனி. பணம் எங்கு கொடுக்கிறார்கள் என்று தெரியும். ஆனால் தேர்தல் ஆணையம் அங்கு செல்லாது. பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு தேர்தலில் நிற்க தடை என நிபந்தனை விதித்திருந்தால் பணப்பட்டுவாடா நடக்காது. தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கிறது. வாக்கு எண்ணிக்கை அவ்வளவு நாட்களுக்கு பிறகு ஏன் நடத்துகிறீர்கள்.

இங்குதான் டிஜிட்டல் இந்தியா என்று பெருமை பேசுகிறீர்கள். அமெரிக்கா அவ்வாறு பேசவில்லை. ஆனால் அங்கு வாக்கு சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடத்தி அடுத்த நாளே முடிவை அறிவிக்கிறார்கள். எதற்காக அவ்வளவு நாட்கள் அடைத்து வைக்கிறீர்கள். அப்போதே எங்களுக்கு சந்தேகம் வருகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஊரடங்கு போடுவீர்கள். நாங்கள் அடங்கியிருப்போம். நீங்கள் அடங்கி இருப்பீர்களா? என்னவோ நடக்குது. தேர்தல் அமைப்பு முறையில் நிறைய மாற்றம் கொண்டு வரவேண்டியுள்ளது” என்றார் சீமான். 

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com