நள்ளிரவில் விசாரணை - சயான், மனோஜை சிறையிலடைக்க நீதிபதி மறுத்தது ஏன்?

நள்ளிரவில் விசாரணை - சயான், மனோஜை சிறையிலடைக்க நீதிபதி மறுத்தது ஏன்?

நள்ளிரவில் விசாரணை - சயான், மனோஜை சிறையிலடைக்க நீதிபதி மறுத்தது ஏன்?
Published on

கோடநாடு வீடியோ தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட சயான் மற்றும் மனோஜை சிறையிலடைக்க எழும்பூர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார். இது வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது. அந்த வீடியோவில் மேத்யூஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தனிப்படை போலீசார், டெல்லி சென்று சயான், மனோஜை கைது செய்தனர். தமிழகம் அழைத்து வந்து நேற்று விசாரணை நடத்தினர். பகலில் அவர்களிடம் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார், மாலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

போலீசாரிடம் நீதிபதி சரமாரி கேள்விகள்:

சயான், மனோஜ் இருவர் மீதும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தல், தமிழக முதல்வர் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பெயரில் வழக்குப் பதிவு செய்திருந்தனர். 

நீதிமன்றத்தில், “என்னென்ன பிரிவுகளின் பேரில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளீர்கள்?, அவர்களது பேட்டியால் எங்கு கலவரம் ஏற்பட்டது? அரசுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது?. சயான், மனோஜ் ஆகியோர் மீது புகாரளித்தவர்களிடம் விசாரணை நடத்தினீர்களா?”  என போலீசாரிடம் நீதிபதி சரிதா சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு வழக்குப் பதிவுக்கான காரணங்கள் குறித்து போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீதிபதி அதனை ஏற்க மறுவிட்டார். வழக்குப் பதிவு மீதான சந்தேகங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே காவலில் அனுப்ப முடியும் என்று அவர் கூறினார். அப்படியில்லை என்றால், வழக்குப் பதிவுகளின் பிரிவுகளை மாற்றினால் மட்டுமே சயான், மனோஜை சிறையில் அடைக்க அனுமதிக்க முடியும் என்றும் நீதிபதி சரிதா கூறினார்.

இதற்கிடையில் தங்கள் தரப்பு வழக்கறிஞர் யார் என்று சயான், மனோஜிடம் நீதிபதி வினவியுள்ளார். தங்கள் தரப்பு வழக்கறிஞர் டெல்லியில் இருந்து வரவேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். அப்போது, வழக்குப் பதிவு குறித்து உரிய விளக்கம் கேட்டு, குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி கடிதம் ஒன்றினை அனுப்பினார். விசாரணையும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த விசாரணையின் போது, எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நள்ளிரவில் தொடர்ந்த விசாரணை:

நேற்றைய விசாரணை நள்ளிரவிலும் தொடர்ந்தது. இரவு 11 மணியளவில் மீண்டும் சயான், மனோஜை சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி சரிதா இல்லத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நள்ளிரவில் மட்டும் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. வழக்குப் பதிவு பிரிவுகளில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். வேறு பிரிவிகளில் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று அப்போது நீதிபதியிடம் போலீசார் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அப்பொழுதும் போலீசாரின் விளக்கங்களை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். சிறையில் அடைக்க மறுப்பு தெரிவித்ததோடு, ஜனவரி 18ம் தேதி நீதிமன்ற விசாரணையின் போது ஆஜராக உத்தரைவிட்டு சயான், மனோஜை நீதிபதி பிணையில் விடுத்தார். 

விடுவிக்கப்பட்ட சயான், மனோஜ்:

நள்ளிரவு 3 மணியளவில் சயான், மனோஜ் இருவரும் விடுவிக்கப்பட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய சயான், “காவல்துறையின் விளக்கத்தை நீதிபதி ஏற்கவில்லை. 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் தங்களது உரிய பாதுகாப்பு அளித்தனர். இங்கு அச்சுறுத்தல் இருப்பதுபோல் உணர்கிறோம்” என்று கூறினார். பின்னர், அவர்கள் அங்கிருந்து செண்ட்ரல் ரயில் நிலையம் வந்து தங்கள் சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றனர். இதனையடுத்து தங்கள் தரப்பு வழக்கறிஞருடன் இருவரும் வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள். 

உணர்வுபூர்வமான வழக்குகளில் நீதிபதி:

வழக்கமாக குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, காவலில் வைத்து விசாரிக்க நீதிபதிகள் அனுமதி அளித்துவிடுவார்கள். இருப்பினும், சில அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, உணர்வுபூர்வமான வழக்குகளில் நிதானமாகதான் விசாரணைக்கு அனுமதி கொடுப்பார்கள். தற்போதைய வழக்கிலும் அதே போன்றுதான், தமிழக போலீசார் தொடர்ந்து வலியுறுத்திய போதும், நீதிபதி காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கவில்லை.

முன்னதாக நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட விவகாரத்திலும் இதேபோன்றுதான் நீதிபதி முடிவெடுத்தார். ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்டதற்காக 124 பிரிவின் கீழ் ‘நக்கீரன்’ கோபால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர், அந்தப் பிரிவு குறித்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com