”ED விசாரணைக்கு ஆஜராக கூடாதென நெருக்கடி கொடுத்தார் அமைச்சர் உதவியாளர்” - அமலாக்கத்துறை பகீர் தகவல்!

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் பாதிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயரை வெளியிடவில்லை - அமலாக்கத்துறை
மணல் கொள்ளை
மணல் கொள்ளைPT
  • மணல் கொள்ளை விவகாரத்தில் சில அதிர்ச்சிகரமான தகவல்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது அமலாக்கத்துறை.

  • சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவாகரத்தில் அமலாக்க துறை சம்மனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, அமலாக்கத் துறை ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்துள்ளது.

  • அந்த மனுவில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராக கூடாது என நீர்வளத்துறை அதிகாரி ஒருவரை, அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி நிர்பந்தித்ததாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை மனுவில் விளக்கப்பட்டிருப்பது என்ன?

சட்டவிரோத மணல் அள்ளிய விவகாரத்தில் அமலாக்கத்துறை சமர்பித்த மனுவில், சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் அளித்த வாக்குமூலத்தையும் தாக்கல் செய்துள்ள மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ”அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் சட்டவிரோதமாக மணல் குவாரிகளில் மணல் அள்ளப்பட்டது. நீர்வளத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டும், இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நீர்வளத்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

துரைமுருகன்
துரைமுருகன்

மேலும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி இருந்த அதிகாரி ஒருவர், ”ஒரு மாதத்துக்கு மேல் தலைமறைவாகிவிட்டதாகவும், பின்னர் அமலாக்கத் துறை முன் ஆஜரான அவர், திருவள்ளூர் மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் என்பவர் தன்னை தொடர்பு கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி செல்போனை அணைத்து வைத்து வைக்கும்படி அமைச்சர் துரைமுருகன் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் அறிவுறுத்தியதாக வாக்குமூலத்தில் கூறியிருந்தார். அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி, அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என மறைமுகமாக தெரிவித்ததாகவும், அதையும் மீறி தான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்” எனவும் ஆட்சேப மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கக்கூடாது என அழுத்தம் கொடுத்த மேலிடம்!

அமலாக்க துறையிடம் வாக்குமூலம் அளித்த மேலும் சில அதிகாரிகள் கூறுகையில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட சட்ட விரோதமாக அதிக அளவில் மணல் அள்ளுவதை தெரிந்தும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என அழுத்தம் கொடுத்ததால் தான் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மேல் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுக்கு கட்டுப்படுவதை தவிர வேறு வழி இல்லை என தெரிவித்ததாகவும் அமலாக்கத் துறை விளக்கியுள்ளது.

மணல் கொள்ளை
மணல் கொள்ளை

சட்டவிரோதமாக மணல் கொள்ளையை அனுமதித்ததன் மூலம், தவறு செய்து விட்டதாக கூறிய நீர்வளத்துறை அதிகாரிகள், மணல் கொள்ளைக்கு மாவட்ட நிர்வாகமும் பொறுப்பாளர்கள் எனவும் தெரிவித்ததாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

அரசு அனுமதித்தை விட 5 மடங்கு அள்ளப்பட்ட மணல்!

அதேபோல், உரிமம் பெற்றுள்ள 28 சுரங்கங்களிலும் அமலாக்கத்துறையின் நிபுணர் குழுவின் மூலம் ஆய்வு நடத்தியதில், 195.37 ஹெக்டேர் பரப்பளவில் அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு மாறாக, 987.01 ஹெக்டேர் நிலப்பரப்பில் மண் அள்ளப்பட்டுள்ளது. நீர்வளத்துறை ஆவணங்களில், 4.05 லட்சம் யூனிட் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதும், 27.70 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மணல் மூலம் கிடைத்த வருவாய் 4 ஆயிரத்து 730 கோடியாக உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்PT

தமிழக அரசு மற்றும் மணல் மாபியாக்கள் மூலம் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்பதால் சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களின் பெயரை குறிப்பிடப்படவில்லை என அமலாக்கத் துறை மனுவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com