\
The DMK has announced that it is not part of the INDIA alliance
INDIA Alliance & Stalin, rahulx page

INDIA கூட்டணியில் இருந்து விலகல்.. திமுக முடிவுக்கு காரணம் என்ன? பாஜக எதிர்ப்பு என்னவாகும்?

INDIA கூட்டணியில் தாங்கள் இல்லை என திமுக அறிவித்துள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்தும், வரும் காலங்களில் மூன்றாவது அணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Published on

மத்திய பாஜக அரசின் அசுரபலத்தை காங்கிரஸ் கட்சியால் தனித்து எதிர்த்து நிற்க முடியாத நிலையில், பிராந்திய கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கில் INDIA கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு எதிரான பிராந்திய கட்சிகளும், காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட தேசியக் கட்சிகளும் இணைந்தன.

இந்தக் கூட்டணியில் முக்கியமான அங்கமும், இப்படி ஒரு கூட்டணி உருவாக்கப்படவும் திமுக ஒரு முக்கியக் காரணமாக கருதப்பட்டது. அதோடு பல்வேறு மாநிலங்களில் இந்தக் கூட்டணியில் சிக்கல்கள் எழுந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்த கூட்டணி ஒற்றுமையாக இருந்து, தொடர்ந்து பல்வேறு தேர்தல்களில் வெற்றிபெற்றது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் திமுக தலைமையில் இந்தக் கூட்டணி போட்டியிட்ட நிலையில், முதல்முறையாக தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து திமுக தலைமையிலான இந்தக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியதோடு, தவெக அரசின் அமைச்சரவையிலும் பங்கேற்றது. அதுமட்டுமன்றி எதிர்வரும் உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. காங்கிரஸை தொடர்ந்து விசிக, IUML ஆகிய கட்சிகளும் தவெக அரசின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்Pt web

கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிய நிலையில், இது திமுகவுக்கு கடும் அதிருப்தி அளித்ததோடு, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பகிரங்கமாகவே காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகின்றனர். இதனிடையே தேசிய அளவில் திமுகவுடனும், மாநில அளவில் தவெகவுடனும் கூட்டணியை காங்கிரஸ் தொடர விரும்புவதாகவே செய்திகள் வெளியாகின.

இதனிடையே INDIA கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், ஜூன் 8 அன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா, தேசிய அளவில் INDIA கூட்டணியுடன் உறவு தொடருமா என்று கேள்வி எழுந்த நிலையில், காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் INDIA கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப்பின் காங்கிரஸ் கட்சி, திமுகவுக்குச் செய்த துரோகத்தால் மனக்காயமுற்றிருக்கும் கட்சியினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திமுக என்றைக்கும் குரல் கொடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து பேசிய திமுக செய்திதொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ’திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி என காங்கிரஸ் கூறிவிட்டது என்றும் இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியோடு எப்படி எங்களால் கூட்டணியில் தொடர முடியும்? அதனால் INDIA கூட்டணியில் திமுக இல்லை என்றும் கூறியுள்ளார்.

INDIA கூட்டணியில் உள்ள கட்சிகளில் காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய உறவு கொண்ட கட்சியாக திமுக பார்க்கப்பட்டது. ஏற்கெனவே INDIA கூட்டணியில் உள்ள இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடனான காங்கிரஸ் கட்சியின் உறவு மோசமடைந்துள்ளது. இந்தச் சூழலில் திமுக விலகியுள்ள நிலையில், பிற கட்சிகள் இந்தக் கூட்டணியை தொடருமா அல்லது பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

The DMK has announced that it is not part of the INDIA alliance
மேகதாது அணை | "தமிழ்நாடு கட்சிகள் அரசியல் செய்வார்கள்" - கர்நாடக முதல்வர் பரபரப்பு புகார்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com