திமுக பேரணி - 110 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணி 110 கேமாராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைமையில் இன்று நடைபெறும் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகளின் பேரணிக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜனநாயக நாட்டில் உரிமைக்காக நடத்தப்படும் போராட்டம் ஆர்பாட்டத்தை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் போலீஸ் தடையை மீறி பேரணி நடைபெற்றால் அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து தொடங்கியுள்ளது. இந்த பேரணியை முன்னிட்டு எழும்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் வழியில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு சுமார் 5000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த பேரணியை கண்காணிக்க 110 கேமராக்களும் 4 ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கிய சந்திப்பு, மாடிகளில் போலீசார் 110 கேமராக்கள் மூலமாக காட்சிகளை பதிவு செய்து கண்காணிக்கின்றனர். 50-க்கும் மேற்பட்ட சிசிடிவிக்கள் மூலமாகவும் கண்காணிப்பு நடைபெறுகிறது.

