“பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை” - டிஜிபி அலுவலகம் பரிசீலனை
சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் என டிஜிபி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக டிஜிபி அலுவலகத்தில் இருந்து ஒரு செய்தி குறிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில், கூறியிருப்பதாவது: “சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் அயல் பணியாக பணிபுரியும் ஒரு கூடுதல் காவல் கன்காணிப்பாளர் ஒரு துணை காவல் கண்காணிப்பாளர், 4 காவல் ஆய்வாளர்கள், 6 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் ஒரு தலைமை காவலர் ஆகியோர் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரை சென்னையில் நேரில் சந்தித்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருக்கும் பொன்.மாணிக்கவேல் மீது புகார் மனுவை அளித்தனர்.
அதில், சிறப்பு அதிகாரி சிலைக் கடத்தல் வழக்குகளில் உரிய ஆவணங்கள், சாட்சிகள் இல்லாமல் சட்டத்திற்கு முரணாக வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை செய்ய வற்புறுத்தியதாகவும் அவரது வற்புறுத்தலை கடைபிடிக்காத காவல் அதிகாரிகளை திட்டியும், மிரட்டியும் வருவதால் தங்களுக்கு பணி மாறுதல் வேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த மனுக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.