தெருநாய்களை விட ஆபத்தானவர்கள் ‘நாய் பிரியர்கள்’.. இணையத்தில் வெடித்த மோதல்கள்!
தெருநாய்கள் குறித்த விவாதமானது நீயா நானா நிகழ்ச்சியால் இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
நாடு முழுவதும் தெரு நாய் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் நாய்க்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
தலைநகர் டெல்லியில் தெரு நாய் தாக்குதல் காரணமாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்ததன் அடிப்படையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்தது.
அப்போது வழக்கு விசாரணையில் பேசிய நீதிபதிகள், இனி டெல்லில் ஒரு தெருநாய்களை கூட பார்க்க முடியாத சூழலை உண்டாக்க வேண்டும் எனவும், தெருநாய்கள் அனைத்தும் பிடிக்கப்பட்டு காப்பகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும், இந்த உத்தரவை மதிக்க தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என எச்சரிக்கைவிடுத்தனர்.
தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்களால் நாய்க்கடியால் இறந்தவர்களின் உயிர்களை திரும்ப கொடுக்க முடியுமா எனவும் விமர்சித்திருந்தனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த வழக்கை தொடர்ந்து தெருநாயால் பாதிக்கப்படுபவர்களுக்கும், தெருநாய்கள் ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்துவிவாதங்கள் அதிகமாக இருந்துவருகிறது. பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல என தெருநாய்களுக்கு ஆதரவாக சில தரப்பினர் போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில் சமீபத்திய நீயா நானா விவாத நிகழ்ச்சியில், நாய்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் கருத்துகளை பார்த்த நெட்டிசன்கள் ‘தெருநாய்களை விட அதற்கு சப்போர்ட் செய்யும் டாக் லவ்வர்ஸ் தான் மிகவும் ஆபத்தானவர்கள்’ என்று கடுமையாக இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.
தெருநாய் வேண்டுமா? வேண்டாமா? இணையத்தில் வெடித்த மோதல்..
தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் vs தெரு நாய்க்கும் நகரத்தில் உரிமை உள்ளது என்ற தலைப்பில் இந்தவார நீயா நானா விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தெருநாய்கடியால் தன் குழந்தையை பறிகொடுத்த தந்தை, நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் தன் மகனை கண்முன்னே பறி கொடுத்த தந்தை, நாய்கடித்து தடுப்பூசி போட்ட பிறகும் 2 மாதம் கழித்து பறிபோன உயிர் மற்றும் தனது பையனை 3 நாய்கள் சுற்றி வளைத்து கடித்துக்குதறிய கொடூரத்தை கண்ணீர்மல்க சொன்ன தந்தை என ஒருபக்கம் தெருநாயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய ஆதங்கத்தை முன்வைத்தனர்.
ஆனால் எதிர்தரப்பில் இருந்த நபர்கள், தெரு நாய்கள் பாவம், அவைகளுக்கு ஒன்றும் தெரியாது. நீங்கள் அதை தாக்குவதைப் போல சென்றால் அது உங்களை கடிக்கும். எல்லா நாய்களும் கடிப்பதில்லை. நீங்கள் ஏன் இரவு 9 மணிக்கு மேல் உங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஏரியாக்களுக்கு செல்கிறீர்கள், ஒரு குழந்தையால் நான் விபத்துக்குள்ளானேன், அதனால் குழந்தைகளை ஒழித்துவிடலாமா என்ற கேள்விகளை முன்வைத்தனர்.
எந்த நேரத்திற்கு நான் எங்கு செல்லவேண்டும் என நாய் எப்படி முடிவுசெய்ய முடியும், நான் தானே முடிவுசெய்ய வேண்டும் எனவும், பணக்கார குழந்தைகள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக எப்போதாவது செய்திகளை பார்த்திருக்கிறீர்களா, சாமான்யன் இருக்கும் தெருக்களில் இருக்கும் தெருநாய்கள் பணக்காரர்கள் வசிக்கும் தெருக்களில் ஏன் இல்லை? எனவும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் எதிர்கேள்விகளை முன்வைத்தார். மேலும் பிரச்னைளால் பாதிக்கப்படும் நாங்கள் தானே நாய் இருக்கவேண்டுமா இல்லையா என்ற முடிவை எடுக்க வேண்டும், நாய்களால் பாதிக்கப்படாத நீங்கள் எப்படி தெருநாய் இருக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க முடியும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
தமிழகத்தில் சுமார் 6 கோடி நாய்கள் உள்ளதாகவும், அதன் கழிவுகளால் ரேபிஸ் தவிர்த்து ஏராளமான நோய் பாதிப்புகள் பரவுவது குறித்தும் கருத்துகள் முன் வைக்கப்பட்டன. மேலும் நாய் மீது அன்பு என்ற பெயரில் நாய் லவ்வர்ஸ் அதிகமாக உணவு வைப்பதும், குழந்தைகள் உள்ளிட்டவர்களை நாய்கள் விரட்டி கடிக்க காரணம் என கூற்றுச் சூழல் ஆர்வலர் ஒருவர் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சி வெளியானதிலிருந்தே தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசியவர்களுக்கு எதிராக இணைய வாசிகள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். பலர் தங்களுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது தெருநாய் குறித்த விவாதமானது இணையத்தில் சூடுபிடித்துள்ளது.