
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் கடந்த 1 ஆம் தேதி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதற்குள் இறங்கிய தூய்மைப் பணியாளர்கள் கோவிந்தன், சுப்புராயலு ஆகிய இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மீஞ்சூர் காவல் துறையினர் பள்ளியின் தாளாளர் சிமியோன் விக்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மறுவாழ்வு சட்டத்தின்படி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 3 நாட்களுக்குள் தலா ₹15 லட்சம் வழங்க மறுத்ததால் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அந்த பள்ளியை தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் ஆகியோர் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த கழிவுநீர் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், பேசியபோது.. "இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தூய்மைப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பது அதிகம். கல்வியில் முன்னேறிய மாநிலம் என சொல்லும் தமிழகத்தில் விஷவாயு தாக்கி உயிரிழப்பது வேதனை அளிக்கிறது. ஆணையம் சார்பில் முறையான உபகரணங்கள் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் தனியாரிடம் வேலை செய்பவர்களின் இறப்பு அதிகம் உள்ளது” எனக் கூறினார்.
மேலும், ”உள்ளாட்சி அமைப்புகளில் தகுந்த உபகரணங்கள் உள்ளன. குறைந்த விலையில் கழிவு நீரை அகற்ற தனியாரை நாடுவதால் உயிரிழப்பு அதிகரிக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் தூய்மைப் பணியாளர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் கழிவுநீர் தொட்டியில் இறங்க மாட்டேன் என்று உறுதி ஏற்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளை தொடர்பு கொண்டால் கழிவுநீரை அகற்றுவதற்கு உரிய வழிகாட்டலும், உபகரணங்களும் வழங்கப்படும்.
கழிவுநீர் தொடர்பாக புகார் அளிக்க 104422 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். அதேபோல் தமிழக அரசு தொழிலாளர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் எந்த கூட்டமும் நடத்தவில்லை, முறையாகவும் செயல்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் கழிவுநீரை அகற்ற உபகரணங்கள் தேவைப்படுவோர் ஆணையத்தை தொடர்பு கொண்டு உபகரணங்களை வாங்கிக் கொள்ளலாம்.
உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாத உள்ளாட்சி அமைப்புகள் குறித்து ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.