மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்கிறது.
சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட ஆண்டான 1956ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றக்கோரி தனது 78ஆவது வயதில் விருதுநகரில் உண்ணாவிரதத்தை தொடங்கினார் காங்கிரஸ்காரரான சங்கரலிங்கனார். இவரின் கோரிக்கையை அப்போதைய காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஏற்க மறுத்தது.
76 நாட்கள் பட்டினிப் போராட்டம் நடத்தியதன் விளைவால் 1956 அக்டோபர் மாதம் 13ஆம் தேதி உயிர்நீத்த சங்கரலிங்கனாரின் கனவை நிறைவேற்றும் வகையில் 1957 மற்றும் 1963இல் திமுகவும் 1961இல் சோஷியலிஸ்ட் கட்சியும் சட்டப்பேரவையில் தீர்மானங்களை கொண்டு வந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த பெரும்பான்மை பலத்தால் அவை முழுமையாக ஏற்கப்படாமல் தோற்கடிக்கப்பட்டன. இந்தநிலையில் இந்தப் பிரச்சனையை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றது கம்யூனிஸ்ட் கட்சி.
அப்போது மதராஸ் மாகாணம் பெயர் மாற்றம் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் காரசாரமாக நடந்தது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் என்ற தொல்காப்பிய வாசகத்தையும் இமிழ்கடல் வேலியை தமிழ்நாடாக்கின என்ற இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தையும் சுட்டிக்காட்டி பேசிய அண்ணாவின் பேச்சால் திருப்தி அடையாத சிலர்; தமிழ்நாடு என பெயரிடுவதால் என்ன லாபத்தை அடையப் போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினர். பார்லிமெண்ட்டை லோக்சபா என்றும்; கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸை ராஜ்ய சபா என்றும் மாற்றியதால் நீங்கள் என்ன லாபத்தை அடைந்துவிட்டீர்கள் என்ற கேள்வி மூலம் தன் பதிலடியை அழுத்தமாக பதிவு செய்தார் அறிஞர் அண்ணா. இருப்பினும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த பெரும் பலத்தால் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பூபேஷ் குப்தா கொண்டுவந்த தனிநபர் மசோதா தோற்கடிக்கப்பட்டது.
இந்த நிலையில் 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அண்ணா தலைமையிலான திமுக அரசு 1968 ஆம் ஆண்டு இதே நாளில் மதராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு எனப் பெயரை மாற்றி பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தால் ஏற்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக போராடிய தலைவர்களின் வரலாறு முழுமையாக இளைய தலைமுறைக்கு போய்ச் சேரவில்லை என்ற விமர்சனங்களும் இதுவரை வைக்கப்பட்டே வருகின்றன. சுதந்திரத்திற்கு பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னரும் மதராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு எனப் பெயரை மாற்ற 12 ஆண்டுகால பெரும் போராட்டம் தேவைப்பட்டுள்ளது.
தகவல்கள் : கதிரவன் - செய்தியாளர்