இதே நாள்.. 50 ஆண்டுக்கு முன்பு கலைக்கப்பட்ட தமிழக அரசு.. ஆட்சியை இழந்த திமுக!
1976 ஜனவரி 31 அன்று, மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது உத்தரவின் கீழ் கலைக்கப்பட்டது. தமிழக ஆளுநர் கே.கே.ஷா மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
1976 ஜனவரி 31 அன்று, பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில், அன்றைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது. நாட்டில் நெருக்கடிநிலை அமலில் இருந்தபோது, குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது அரசமைப்புச் சட்டப் பிரிவு 356இன் கீழ் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்தார்.
1971 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைத்திருந்தது. திமுக அரசின் பதவிக் காலம் நிறைவடைய சுமார் 50 நாட்களே இருந்த சூழலில் ஆட்சி கலைக்கப்பட்டது. முன்னதாக, தமிழக ஆளுநர் கே.கே.ஷா தமிழக அரசின் செயல்பாடு குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தார். தமிழக அரசு ஊழலில் திளைப்பதாகவும், மத்திய அரசின் நெருக்கடிநிலைக் கால உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்றும், மாநில சுயாட்சி என்ற பெயரில் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாகவும் ஆளுநரின் அறிக்கை குற்றம்சாட்டியது.
அரசு கலைக்கப்பட்ட பின், தமிழகம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் வந்தது. நிர்வாகத்தை வழிநடத்த பி.கே. தவே மற்றும் ஆர்.வி. சுப்பிரமணியன் ஆகிய இரு ஆலோசகர்களை மத்திய அரசு நியமித்தது. திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.சர்க்காரியா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
திமுக அரசைக் கலைத்த மத்திய அரசின் நடவடிக்கையை அன்றைய அதிமுக பொதுச் செயலாளர் எம்.ஜி.ஆர் ’ துணிச்சலான செயல்’ என்று பாராட்டினார். முதல்வர் பதவியை இழந்திருந்த கருணாநிதி தமிழக மக்களை அமைதிகாக்க வலியுறுத்தினார். 1977 இல் நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெற்றது. ஏம்ஜிஆர் முதல்முறையாக தமிழக முதல்வரானார். அதற்குப் பிறகு கடந்த ஐம்பது ஆண்டுகளாக திமுகவும் அதிமுகவுமே மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்துவருகின்றன.

