சென்னையில் குடிநீர் பற்றாக்குறை? - கல்குவாரிகளில் தண்ணீர் எடுக்க அரசு திட்டம்

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை? - கல்குவாரிகளில் தண்ணீர் எடுக்க அரசு திட்டம்

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை? - கல்குவாரிகளில் தண்ணீர் எடுக்க அரசு திட்டம்
Published on

சென்னையில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என அஞ்சப்படும் நிலையில், நீர் பற்றாக்குறையை போக்க மாற்று ஏற்பாடுகளை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

சென்னை தண்ணீர் பஞ்சத்திற்குள் காலடி எடுத்து வைத்துவிட்டது. நல்ல மழைப்பொழிவு இருந்தால்தான் சென்னை மக்கள் கோடை காலத்தை போராட்டம் இன்றி கடத்த முடியும். மழைப்பொழிவின் அளவு குறைந்தால் அது கோடை காலத்தில் எதிரொலிக்கும். நிலைமை இப்படி இருக்க, இந்த வருடம் மழை பெய்யவே இல்லை என்பதுதான் தற்போதைய மிகப்பெரிய பிரச்னை. வரும் கோடையில் சென்னை மிகப்பெரிய தண்ணீர் போராட்டத்துக்கு தயாராக வேண்டுமென்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

நாள் ஒன்றுக்கு சென்னையின் சராசரி தண்ணீர் தேவை 830 மில்லியன் லிட்டர் ஆகும். இந்த அளவின்படி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டால் தினந்தோறும் ஒரு வீட்டிற்கு 140 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் நீர்நிலைகளின் தண்ணீர் குறைவை கணக்கில் கொண்டு, கடந்த டிசம்பர் மாதம் முதல் மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் அளவு 830 மில்லியன் லிட்டரிலிருந்து 650 மில்லியன் லிட்டராக மெட்ரோ வாட்டர் நிர்வாகம் குறைத்தது.

இந்தச் சூழலில் சென்னையின் நீர் ஆதாரங்கள் மேலும் மோசமடைந்ததால் அந்த நீரின் அளவை மீண்டும் குறைக்க தற்போது மெட்ரோ நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு ஒரு வீட்டுக்கு 60 லிட்டருக்கும் குறைவான தண்ணீரையே பயன்படுத்த வேண்டும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து கொண்டே செல்வதால், மாற்று நீர் ஆதாரங்கள் மூலமாக குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய பொதுப்பணித் துறையும் சென்னைக் குடிநீர் வாரியமும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவும் நேற்றைய நிலவரப்படி 11,257 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. 

இந்த நீரைக் கொண்டு மாநகரின் குடிநீர் தேவையை ஒரு மாதம் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். அதனால் கோடை காலத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை சமாளிக்க சிக்கராயபுரம் உட்பட 22 கல்குவாரிகளில் இருந்தும் விவசாயக் கிணறுகளில் இருந்தும் தண்ணீர் எடுக்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதற்காக சிக்கராயபுரம் கிராமத்தைச் சுற்றியுள்ள 22 கல்குவாரியில் இருந்து தினமும் 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கும் பணி நடைபெறுகிறது. அந்தத் தண்ணீரை செம்பரம்பாக்கம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு விநியோகிக்கப்படும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்படும் என்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயக் கிணறுகளில் இருந்து தினமும் 120 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் மாற்று நீர் ஆதாரங்களில் போதிய அளவு தண்ணீர் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.இந்நிலையில் சென்னையின் நீர் தேவையை பூர்த்தி செய்யவும் கோடை காலத்தில் ஏற்பட போகும் குடிநீர் பற்றாகுறையை போக்கவும் எம்மாதிரியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com