காவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

காவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
காவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

நெல்லையில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற காவலர் ஜெகதீஷ் துரை கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து நெல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தவர் ஜெகதீசன் துரை. இவர் நான்குநேரி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர். மணற்கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வந்த இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நம்பியாற்றில் நடைபெற்ற மணல் கொள்ளையை தடுக்க 5 பேர் கொண்ட குழுவுடன் இணைந்து சென்றார். அனைவரும் தனித்தனியாக பிரிந்து சென்று மணல் கொள்ளையர்களை தேடியுள்ளனர். அப்போது மணல் ஏற்றிச்சென்ற டிராக்டர் ஒன்றை மடக்கிய ஜெகதீசனை, இரும்புக்கம்பி மற்றும் பயங்கர ஆயுதங்களால் மணல் கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த ஜெகதீசன் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது தொடர்பாக நெல்லை விஜயநாராயணம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் தாமரை குளத்தைச் சேர்ந்த முருகன்,கிருஷ்ணன் மற்றும் முருகப் பெருமாள் கல்மாணிக்கபுரத்தைச் சேர்ந்த மணிகுமார்,ராஜா ரவி மற்றும் அமிதா பச்சன் ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய முருகன், கிருஷ்ணன், மணி குமார், ராஜாரவி, அமிதாபச்சன், முருகப் பெருமாள் ஆகிய 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் முருகப் பெருமாள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் மீதி 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நெல்லை மாவட்ட நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார். இந்தப் படுகொலை சம்பவம் நடந்து 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com