யானையை கருணைக்கொலை செய்யலாம்: நீதிமன்றம் அனுமதி
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணைக் கொலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 42 வயதுடைய ராஜேஸ்வரி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு கடந்த 5ம் தேதி முதல் வலது காலில் வீக்கம் ஏற்பட்டது. இதனால் யானை நிற்க முடியாமல் அன்று முதல் தொடர்ந்து படுத்தப் படுக்கையாக உள்ளது. இதையடுத்து வனத்துறையைச் சேர்ந்த கால்நடை டாக்டர் மனோகரன், சேலம் மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் லோகநாதன் மற்றும் சில கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தினசரி குளூகோஸ், நரம்பு ஊசி, நோய் எதிர்ப்பு சக்தி ஊசி, தாது உப்புக்கள், களி மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. யானைக்கு மூலிகை மற்றும் எண்ணெய் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல், எழுந்து நிற்காமல் தொடர்ந்து படுத்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் யானையின் முன் வலது பாதத்தில் திடீரென புழுக்கள் வைக்க ஆரம்பித்துள்ளது. இந்தப் புழுக்கள் பாதத்தில் மேலும் பரவியுள்ளது.நோய் தீவிரமடைந்து வருவதால் யானை மிகவும் அவதிப்பட்டு வருகிறது.
ராஜேஸ்வரியை கருணைக் கொலை செய்ய நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.சென்னை கோட்டூர் கார்டன்ஸ் பகுதியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தச் சமய அறநிலையத்துறையின் அறிக்கை கேட்டு வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் யானையை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.மேலும் யானையின் உடல்நிலையை பரிசோதனை செய்து அடுத்த 48மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.