குக்கர் கடையில் ஆய்வு செய்து பலனில்லை: தினகரன் ஆதரவாளர்
சென்னை ஆர்கேநகர் தொகுதி மக்கள் டிடிவி தினகரனையே வெற்றிப் பெற செய்வார்கள் என்றும், குக்கர் கடையில் ஆய்வு செய்து பலனில்லை என்றும் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் தேர்தல் பார்வையாளர்களுடன் வருமான வரி அதிகாரிகள் இணைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் அதிகளவில் குக்கர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். மேலும் குக்கர் கடையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனைக்கு தினகரன் ஆதரவாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, சென்னை ஆர்கேநகரில் நடைபெறும் இடைத்தேர்தலில் தொகுதி மக்கள் டிடிவி தினகரனை வெற்றிப் பெற செய்வார்கள் என்று கூறினார். மேலும், குக்கர் கடைகளில் மட்டுமே அதிகாரிகளால் சோதனை செய்ய முடியும் என்றும், மக்கள் மனதில் குக்கர் சின்னம் பதிந்து விட்டால் அதை அவர்களால் சோதனை செய்ய முடியாது என்று அவர் தெரிவித்தார்.