மாநில கல்வி கொள்கை என்றால் என்ன? தமிழ்நாடு அரசின் கல்வி கொள்கையின் அவசியம் என்ன? - விரிவான அலசல்

தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழு தனது பணியை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் மாநில கல்வி கொள்கை என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? என்பது குறித்து விளக்கமாக பார்க்கலாம்.
மாநில கல்வி கொள்கை
மாநில கல்வி கொள்கைc

கல்வி என்பது மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. கல்வி கற்ற சமூகமே மேன்மையடைந்த சமூகமாகக் கருதப்படும் சூழலில் கல்வியே அழிவில்லா செல்வம் என்பதை நாம் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். அத்தகைய கல்வியை எப்படிவழங்குவது? எதனை அடிப்படையாக வைத்து வழங்குவது? என்பதை வரையறை செய்வதே கல்விக் கொள்கையாகும்.

மாநில கல்வி கொள்கை
மாநில கல்வி கொள்கைமாநில கல்வி கொள்கை

மத்திய அரசு புதியகல்வி கொள்கையை உருவாக்கி அறிமுகப்படுத்தியபோது அதற்கு மாநிலங்கள் பலவும் எதிர்ப்புகளைத் தெரிவித்தன.

கல்வி என்பது மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டது எனவும் அந்தந்த மாநில மக்களுக்குத் தேவையான கல்வி முறையைப் புரிந்து கொண்டு, அதற்கு தகுந்தார் போல் கல்விச் சூழலை உருவாக்கித் தரும் ஆற்றல் மாநில அரசுக்கே இருப்பதாகவும், நிலப்பரப்பை பொருத்து கல்விச் சூழல் மாறுபடும் நிலையில் நாடு முழுவதும் பொதுவான கல்வியை மத்திய அரசு புகுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் தான் தமிழகத்துக்கு என்று மாநில கல்விக் கொள்கையை உருவாக்க உயர்மட்ட குழுவை திமுக அரசு கடந்த 2022ஆம் ஆண்டு அமைத்தது. இதன் அடிப்படையில் மாநிலக் கல்விக் கொள்கையைத் தயார் செய்ய டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையிலான 12 நபர்களை உள்ளடக்கிய உயர்மட்ட குழு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்டது.

மாநில அரசின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்யும் பணியை மேற்கொண்ட இந்த குழு, மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துகளை பெற்றது.

தமிழ்நாடு முழுவதும் மண்டல அளவில் கருத்து கேட்பு கூட்டங்களையும் நடத்தியது. ஓராண்டில் மாநிலக் கல்விக் கொள்கையை தயார் செய்து இறுதி அறிக்கையை 2023 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் சமர்ப்பிக்க வேண்டுமென மாநில அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், பணிகள் நிறைவடையாததால் கூடுதலாக 4 மாதங்கள் அவகாசமும் வழங்கப்பட்டது.

அதன்படி தயார் செய்யப்பட்ட அறிக்கை விரைவிலேயே அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அறிக்கையை மொழிபெயர்க்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பெண் கல்வி, மலைவாழ் குழந்தைகளுக்கான கல்வி, நலிந்த சமுகத்தினருக்கான கல்வி, சிறப்பு குழந்தைகளுக்கான கல்வி, மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய கல்வி, தொழிற்கல்வி என ஒவ்வொரு தரப்பினரின் பார்வையில் அணுகி இந்த மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வகையில் கல்வி இருப்பதை தவிர்க்க வேண்டும், 5 வயதுக்குட்பட்ட

குழந்தைகளுக்கு கற்பித்தல் தவிர்த்து விளையாட்டு சார்ந்த கல்வியை கொடுக்க வேண்டும், திறன்களை அதிக அளவில் வெளிப்படுத்தும் கல்வியை கொடுக்க வேண்டும், அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கக்கூடிய கல்வியை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பிரதான கருத்துகள் இந்த கல்விக் கொள்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாநில கல்வி கொள்கை
மாநில கல்வி கொள்கைமாநில கல்வி கொள்கை

இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு அரசு இதற்கான கொள்கைகளை வகுத்து சட்டங்களை இயற்றி நடைமுறைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில கல்வி கொள்கைக்கான முறையான திட்டங்கள் வகுக்கப்படும் சூழலில் 2024-25 கல்வியாண்டிலேயே அமலுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி கொள்கை என்பது ஒரு மாநிலத்தை அடுத்த கட்டமாக எதை நோக்கி கொண்டு செல்லப்போகிறது என்பதை தீர்மானிக்கக் கூடிய முக்கியமான காரணியாக இருப்பதால் தமிழ்நாடு அரசின் மாநில கல்வி கொள்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com