அபயக்குரலுக்கு ஓடிவரும் கந்தனை போல் மக்களை முதல்வர் காக்கிறார் - அமைச்சர் சேகர்பாபு
திருவாரூர் மாவட்டத்தில் தியாகராஜர் கோவிலுக்குச் சொந்தமான கமலாலய குளத்தின் தென்கரை சுவர் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் இடிந்தது விழுந்தது.
இதனை பார்வையிட வந்த இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "முதல்வர் உத்தரவுபடி விரைவில் இடிந்த பகுதி சரி செய்யப்படும். ஏற்கெனவே இந்த குளத்தில் இருமுறை சுவர் சரிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த குளத்தின் நான்கு கரைகளிலும் உள்ள சுவரை வல்லுநர்கள் குழு வைத்து ஆராய்ந்து போதிய அளவு நிதியை பெற்று நிரந்தரமாக இதுபோல் சம்பவம் நிகழாதவாறு சரிசெய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சரி செய்யப்படும்.
கமலாலயக் குளம் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்பட்டு படகு சவாரி உள்ளிட்டவை செயல்படுத்தப்படும். அதேபோல் குளத்திற்கு வரக்கூடிய நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை மாவட்ட நிர்வாகம் சரி செய்யும். கல்லுத்தேர் சுற்றி மரம், செடி வைக்கும் பணி முடிவுற்றுள்ளது. 100 ஆண்டு பழமை வாய்ந்தது என்பதால் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நீதிமன்ற அனுமதிக்காக காத்திருக்கிறோம்.
எங்கு அபயக்குரல் கேட்டாலும் கந்தன்போல் அங்கு முதல்வர் காட்சி தருவார். தொற்றின் காரணமாகத்தான் முதல்வர் மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். முதலில் நான்கு நாள் தரிசனம் தற்போது ஏழு நாட்கள் தரிசனமாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஓடாத 65 தங்கத் தேர் 49 வெள்ளி தேர்கள் இந்த ஆட்சியில் ஓட விடப்பட்டுள்ளது.
சுற்றுலா வரக்கூடிய பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை செய்து கொடுக்கும். பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் கண்டு பிடித்த சிலைகள் எத்தனை சதவீதம் என எடுத்துக்கொண்டால் அவர்கள் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை விட 40 சதவீதத்திற்கும் அதிகமாக ஆறு மாதத்தில் திமுக ஆட்சியில் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் தொடர்ந்து இது குறித்து ஆய்வு செய்து வருகிறார். ஓர் ஆண்டு திமுக ஆட்சி நிறைவு பெற்றவுடன் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் எத்தனை சிலைகள் மீட்கப்பட்டுள்ளன என்ற விவரமும், தமிழகத்தில் இருந்து எத்தனை சிலை கடத்தலை தடுத்து இருக்கிறோம் என்ற விவரமும் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்