பதவி விலகுங்கள்: கூட்டணிக்கு எதிராக வென்ற திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

பதவி விலகுங்கள்: கூட்டணிக்கு எதிராக வென்ற திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
பதவி விலகுங்கள்: கூட்டணிக்கு எதிராக வென்ற திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றிபெற்ற தி.மு.க.வினர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 22-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றி பெற்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர்.

இதையடுத்து இன்று காலை நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுகவினர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றி பெற்றனர். இதையடுத்து இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தி வந்தார். 

இந்நிலையில், கூட்டணிக்கு எதிராக தேர்வான திமுகவினர் பதவி விலக மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தோழைமை கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் வென்ற திமுகவினர் பதவி விலக வேண்டும் என்றும், தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்ற திமுகவினர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகிவிட்டு தன்னை நேரில் சந்திக்குமாறு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை வருத்தமடையச் செய்துள்ளது என்றும், குற்ற உணர்ச்சியால் கூனி நிற்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுகவின் கட்டுப்பாட்டைச் சிலர் காற்றில் பறக்கவிட்டு சாதித்துவிட்டதாக நினைப்பதாகவும், அப்படி உடனடியாக பதவி விலகாவிடில் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் மு.க.ஸ்டாலின்  கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com