பழைய துணியோடு போன ரூ.11 லட்சம் : ஒரே நாளில் மீட்டெடுத்த காவல்துறையினர்

பழைய துணியோடு போன ரூ.11 லட்சம் : ஒரே நாளில் மீட்டெடுத்த காவல்துறையினர்
பழைய துணியோடு போன ரூ.11 லட்சம் : ஒரே நாளில் மீட்டெடுத்த காவல்துறையினர்

சென்னை தேனாம்பேட்டையில் ஆதரவற்றோர் இல்லத்துக்காக பழைய துணி வாங்க வந்த பெண்ணிடம் 11 லட்சம் ரூபாயை இழந்த தம்பதியின் வேதனையை ஒரே நாளில் காவல்துறையினர் தீர்த்து வைத்துள்ளனர். 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர்கள் ரவி - சுசீலா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ரவி இஸ்திரி கடை‌ நடத்தி வருகிறார். சுசீலா வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி ரவியும் சுசீலாவும் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டில் அவர்களது பிள்ளை‌கள் மட்டுமே இருந்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சில இளைஞர்களுடன் ரவியின் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது திரு‌வள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் "அம்மா டிரஸ்ட்" என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் நடத்துவதாகக் கூறிய அந்தப்பெண், வீட்டில் பழைய துணிகள் ஏதேனும் இருந்தால் கொடுங்கள் எனக்கேட்டுள்ளார். மனமிறங்கிய ரவியின் மகன், வீட்டின் பீரோவில் இருந்த பழைய துணிகளை எடுத்துக் கொடுத்திருக்கிறார். 

இந்த நிலையில் மாலையில் வேலை முடித்து வீடு திரும்பிய சுசீலா, பீரோவில் பழைய துணிகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். காரணம், வீடு கட்டுவதற்காக சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த 11 லட்சம் ரூபாய் அந்தப் பழைய துணிகளுக்குள்தான் இருந்தது. பணம் இருப்பது தெரியாமல் சுசீலாவின் மகன் பழைய துணி‌களை தானம் கொடுத்து விட்டார். தவித்துப் போன ரவியும் சுசீலாவும் துணி வாங்கிய பெண் கொடுத்த துண்டு பிரசுரத்தில் இருந்த முகவரிக்குச் சென்று பார்த்தனர். அங்கு அப்படி ஓர் ஆதரவற்றோர் இல்லமே இல்லை. பழைய துணி வாங்கிச் சென்றது மோசடிப் பேர்வழிகள் என்பதை அறிந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

பின்னர் உடனடியாக சிசிடிவி காட்சிகள் மூலம் பழைய துணிகள் வாங்கிச் சென்ற பெண் பயணித்த ஆட்டோ கண்‌டறியப்பட்டது. அதன் ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் செங்குன்றத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரை காவல்துறையினர் பிடித்தனர். ரவி வீட்டில் வாங்கிய துணிகளில் 11 லட்சம் ரூபாய் இருந்ததை மகாலட்சுமி ஒப்புக்கொண்டார். 11 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். ஆதரவற்றோருக்கு தேவை எனக்கூறி பழைய துணிகளை வாங்கி செங்குன்றத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரிடம் கொடுத்து மகாலட்சுமி கமிஷன் பெற்று வந்தது தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள அரவிந்தனை காவல்துறையினர் தேடி வருகின்ற‌னர். 11 லட்சம் ரூபாயை மீட்டுக் கொடுத்த காவல்துறையினருக்கு ரவி - சுசீலா தம்பதி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com