தமிழ்நாடு
கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் எனத் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ''கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், கோலியனூர், வல்லம், வளவனூர், மணம்பூண்டி ஆகிய 5 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது. திண்டிவனம், கோலியனூர், வல்லம், வளவனூரில் தலா 22 செ.மீ. மழையும், மணம்பூண்டியில் 21 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 35-க்கும் அதிகமான இடங்களில் தலா 10 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும். குமரிக்கடல், மன்னார் வளைகுடாவில் மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வரை சூறைக்காற்று வீசக்கூடும்.
வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களுக்கு மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தருமபுரி, வேலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் வட மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்'' என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 500 கன அடியாக குறைப்பு