“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி
உள்ளாட்சி அமைப்பு நிதியாக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்றுள்ள நிதி குறித்து அமைச்சர் வேலுமணி சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணை முடிவுற்ற நிலையில் இன்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரும் அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்து உள்ளாட்சி அமைப்பு நிதி குறித்து திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்து பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, 2015 - 2019 வரை மத்திய அரசு ரூ. 12, 312 கோடி அளிக்க வேண்டும் எனவும் ஆனால் ரூ. 8, 531 கோடியை தான் தமிழகத்திற்கு தந்துள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளார். எஞ்சிய 3,781 கோடி தொகையை பெறுவதற்கு தமிழக அரசு முயற்சி எடுத்து வருவதாக ஸ்டாலினுக்கு வேலுமணி பதில் அளித்துள்ளார்.