விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்
டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் என கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் சில மாதங்களுக்கு முன்பு பள்ளிப்பாளையம் அருகே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இந்த வழக்கில் சந்தேகம் எழவே 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தன. இதில் ஒரு பிரிவு திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தலைமையில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ல் விஷ்ணுபிரியா அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று அவரது தந்தை குற்றம் சாட்டினார்.
மேலும் விஷ்ணு பிரியா வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷ்ணு பிரியாவின் தந்தை ரவி வழக்கு தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணை செய்து கடந்த ஏப்ரல் மாதம் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில், இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இல்லை. வழக்கை கைவிடுவதாக தெரிவித்திருந்தது.
இதற்கு எதிராக விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி எதிர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் என தெரிவித்துள்ளது.
விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்வதற்கு முன்பு உயரதிகாரியிடம் பேசியது குறித்து அறிக்கையில் இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள் அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.