“உதயநிதி ஸ்டாலின் தலையீடுதான் எனது பிரச்னைக்கு காரணம்” - கு.க.செல்வம்
என்னை திமுகவிலிருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை என ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “என் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த முகாந்திரம் இல்லை. என்னை கட்சியிலிருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை. கட்சி சார்பற்ற எம்.எல்.ஏவாக இருப்பேன். இந்த தொகுதியில் ஸ்டாலின் தோற்றுள்ளார். திமுக இரண்டு முறை தோற்றுள்ளது.
ஆனால் நான் வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது. எந்த கட்சிக்கும் செல்ல விருப்பமில்லை. எனக்கு யார் வாய்ப்பு கொடுக்கிறார்களோ அந்த கட்சியின் சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவேன். திமுகவில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ, எம்பிக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். விரைவில் வெளியே வருவார்கள். உதயநிதி ஸ்டாலின் தலையீடுதான் எனது பிரச்னைக்கு காரணம். யார் நல்லபடியாக ஆட்சி நடத்துகிறார்களோ அவர்களை பாராட்டி சட்டமன்றத்தில் பேசுவேன். துரைமுருகனை பேச வைக்கின்றனர், அவராக பேசவில்லை” எனத் தெரிவித்தார்.