எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு அமைக்க தடை கோரி வழக்கு

எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு அமைக்க தடை கோரி வழக்கு

எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு அமைக்க தடை கோரி வழக்கு
Published on

சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு கட்ட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது.  எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். 

இதனைத்தொடர்ந்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் நடைப்பெற்றது. பின் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நினைவு வளைவு அமைக்க தடை கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் குமார் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், ஏற்கனவே காமராஜர் சாலையில் வைக்கப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன் சிலை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளதாகவும்,  சாலை மேம்பாட்டை தவிர்த்து எந்தக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தில், சாலைகளின் குறுக்கே, சாலையோரங்களில் எந்த நிரந்தர கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், அந்தச் சட்டத்தை மீறி சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.

ஆளும் அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருவதால் அரசியல் லாபத்துக்காகவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு நினைவு வளைவு கட்டப்படுவதாக இந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த மனு நவம்பர் 19ஆம் தேதி நீதிபதிகள் எம்.சத்யநாராயணன்,பி.ராஜமாணிக்கம் அமர்வில் பட்டியலிடப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com