தேசிய கொடியை அவமதித்து தொடர்பான வழக்கில், அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2013-ல் கோவை உக்கடம் பகுதியில் மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தேசியக்கொடியின் மூவர்ணத்தில் செய்யப்பட்ட கேக் வெட்டப்பட்டது. இதில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயகர், காவல்துறை துணை ஆணையர் பிரவேஸ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் தேசிய கொடி அவமதிக்கப்பட்டதாக இந்து மக்கள் கட்சி நிர்வாகி செந்தில் குமார் என்பவர் கோவை 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.