பைரவா பட பாணியில் மோசடி - குமரி நர்சிங் கல்லூரி மீது புகார்களை குவிக்கும் மாணவிகள்

பைரவா பட பாணியில் மோசடி - குமரி நர்சிங் கல்லூரி மீது புகார்களை குவிக்கும் மாணவிகள்
பைரவா பட பாணியில் மோசடி - குமரி நர்சிங் கல்லூரி மீது புகார்களை குவிக்கும் மாணவிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முறையான அனுமதி இன்றி செயல்படும் தனியார் நர்சிங் கல்லூரி பட்ட படிப்பு என மாணவர் சேர்க்கை நடத்தி ஏமாற்றியதாக மாணவிகள் குற்றச்சாட்டியுள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளச்சிவிளையில் செயல்பட்டுவரும் கேப் சிட்டி இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் நர்சிங் படிக்கும் மாணவிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் கேப் சிட்டி இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி விடுதியில் தங்கி நர்சிங் பயின்று வருகின்றனர்.

மேலும் இந்தக் கல்லூரியின் நிர்வாகிகள் இக்கல்லூரிக்கு மத்திய மாநில அரசுகளின் சான்றிதழ் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலில் அங்கீகாரம் பெற்றுள்ளதாக ஏமாற்றி இடைத்தரகர்கள் மூலம் தங்களை கல்லூரியில் சேர்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். சேர்க்கையின்போது எங்களது பள்ளி அசல் சான்றிதழை பெற்றுக் கொண்டனர். இங்கு போதுமான அடிப்படை வசதி ஏதும் இல்லை. மிகச் சிறிய அறையில் 100 பேருக்கு மேல் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தேவையான உணவு தருவதில்லை எனவும் கழிவறை வசதி போதுமானதாக இல்லை எனவும் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டிருந்தனர்.

அதோடு, அந்தக் கல்லூரியில் எக்ஸ்ரே லேப் போன்ற எந்தவித வசதியும் கிடையாது. இதற்கிடையில் கல்லூரியின் தாளாளர் அடிக்கடி மாணவிகளிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து புகார் தெரிவித்தால் பள்ளி அசல் சான்றிதழை தர மாட்டோம் உங்கள் கல்லூரி சான்றிதழும் கிடைக்காது அதையும் மீறி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று கூறி மிரட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், தங்களை தனியார் மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுப்பி ஒவ்வொரு மாணவியருக்கும் சுமார் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை ஊதியமாக அவர்கள் பெற்றுக்கொண்டு எங்களது சம்பளத்தை எங்களுக்கு தராமல் மிரட்டி வருவதாகவும் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டு எங்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து மாணவிகள் அளித்த மனு மீதான விசாரணை பத்மநாபபுரம் துணை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் பயிற்சி என்ற பெயரில் நாகர்கோயில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இந்த மாணவிகள் விசாரணைக்கு செல்ல மருத்துவமனை நிர்வாகம் தடை விதித்தது. இதனால் கோபம் கொண்ட மாணவிகள் காவல் துறைக்கு அளித்த தகவலின்படி போலீசார் விரைந்து சென்று மருத்துவமனையில் விசாரணையில் ஈடுபட்டு மாணவிகளை விசாரணைக்கு ஆஜராக அனுப்பி வைத்தனர்.

விசாரணைக்கு ஆஜரான மாணவிகள் மீண்டும் கல்லூரிக்கு சென்ற போது நிர்வாகம் தரப்பில் மாணவிகளிடம் புகாரை திரும்ப பெற மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரத்தி அடைந்த மாணவிகள் கல்லூரி வளாகம் முன்பு பெற்றோருடன் அமர்ந்து தர்ணாவில் இரவு வரை ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த இரணியல் போலீசார் அவர்களிடம் புகார் மனு பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

இதைத் தொடர்ந்து இந்த புகார் குறித்து விரிவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்டட காவல் கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன், இரணியல் காவல்நிலைய போலீசாருக்கு உத்தரவிட்ட நிலையில் மாணவிகள் புகார் குறித்து விசாரித்த இரணியல் போலீசார் மாணவிகளின் புகாரின் உண்மை தன்மையை அறிந்து பள்ளி தாளாளர் செல்வகுமார் மற்றும் அவரது மனைவியும் கல்லூரி முதல்வருமாகிய செல்வராணி ஆகியோர் மீது ஆபாசமாக பேசுதல் கொலை மிரட்டல் பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் கல்லூரி சான்றிதழ்களை பறிமுதல் செய்து விசாரணைக்கு அனுப்பியுள்ள நிலையில் நாளை கல்லூரியில் சுகாதார துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com