\
மீண்டும் தலைதூக்குகிறதா பெண் சிசுக் கொலை? - மதுரையில் மூவர் கைது

மீண்டும் தலைதூக்குகிறதா பெண் சிசுக் கொலை? - மதுரையில் மூவர் கைது

மீண்டும் தலைதூக்குகிறதா பெண் சிசுக் கொலை? - மதுரையில் மூவர் கைது
Published on

பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தையைப் பெற்றோரே கொன்று புதைத்த கொடூர சம்பவம் மதுரையில் நடந்தேறியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்துள்ள புள்ளநேரியை சேர்ந்த தம்பதி வைரமுருகன் மற்றும் சௌமியா. இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி அக்குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, பெற்றோர் குழந்தையை வீட்டின் முன்பு உள்ள வேப்ப மரத்தின் அருகே புதைத்துள்ளனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கேட்டபோது உடல் நலக்குறைவு காரணமாக குழந்தை இறந்துவிட்டதால் புதைத்து விட்டதாக பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ஊர்மக்கள் செக்கானூரணி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் இது தொடர்பாக செக்கானூரணி போலீசார் நடத்திய விசாரணையில், 30 நாள் ஆன பெண் சிசுவை பெற்றோர்களே கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து குழந்தையின் தந்தை வைரமுருகன் மற்றும் தாய் சௌமியா மற்றும் குழந்தையின் தாத்தா சிங்கத்தேவர் ஆகிய 3 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை, டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான குழு, புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து மீண்டும் குழந்தையை அதே இடத்தில் புதைத்தனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், தங்கள் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் சிசுக்கொலை அதிகரித்து இருந்ததாகவும், அது  மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் முற்றிலும் குறைந்திருந்தாகவும் கூறியுள்ளனர். ஆனால் தற்போது நடந்த இந்தச் சம்பவம் மீண்டும் பெண் சிசுக்கொலை நடைபெற துவங்கி விட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றனர்

இது குறித்து மதுரை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சாந்தியிடம் தொடர்புக் கொண்டு கேட்டபோது, தான் நாளை இது குறித்து விசாரணை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com