மாமூல் வசூல் செய்யும் போலீஸ் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் பாயும்!
மாமூல் வசூல் செய்யும் மற்றும் லஞ்சம் வாங்கும் காவல்துறையினர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது.
சேலம் நகர் குற்றப்பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராமசாமி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் மாமூல் வாங்கியதாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டதால் தன்னுடைய பதவி உயர்வு பறிபோனது என்றும், எனவே அந்த தண்டனையை ரத்து செய்யவேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீது விசாரணை நடைபெற்ற போது, தமிழகத்தில் காவல்துறையினர் பொது இடங்களில் மாமூல் வசூலிப்பது அனைவரும் அறிந்த ஒன்று என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்தார்.
காவல்துறையினர் மாமூல் வசூலிப்பது காவல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது என்றும், இப்படி இருக்கும் போது மக்கள் எப்படி காவல்துறையினரை நண்பர்களாக பார்ப்பார்கள் என கேள்வி எழுப்பினார். மாமூல் வசூல் செய்யும் மற்றும் லஞ்சம் வாங்கும் காவல்துறையினர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டார். வழக்கு பதிவு செய்ய தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி வலியுறுத்தினார்.