கொரோனா நிவாரண பணிக்கு உண்டியல் சேமிப்பை நிதியுதவியாக வழங்கிய சிறுவர்கள்!

கொரோனா நிவாரண பணிக்கு உண்டியல் சேமிப்பை நிதியுதவியாக வழங்கிய சிறுவர்கள்!
கொரோனா நிவாரண பணிக்கு உண்டியல் சேமிப்பை நிதியுதவியாக வழங்கிய சிறுவர்கள்!

கோவையில் குழந்தைகள் இரண்டு பேர் தங்களது பள்ளிக் கட்டணத்திற்காக வைத்திருந்த உண்டியல் சேமிப்பான 7 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரண பணிகளுக்கு வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு நிதியுதவி வழங்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். இதன் பேரில் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் கோவையை சேர்ந்த குழந்தைகள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரணத்திற்காக நிதியுதவி வழங்கியுள்ளனர்.

கோவை ஆவாராம்பாளையம் சாலையில் உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 5 வயதில் எல்கேஜி படிக்கும் ரேனோ ஜோஸ்வா என்ற மகனும், 3 வயதில் பிரிகேஜி படிக்கும் ஷெர்லி என்ற மகளும் உள்ளனர். கொரோனா பற்றிய செய்திகளை கேட்ட குழந்தைகள் இருவரும், கொரோனா நிவாரண நிதி வழங்கலாம் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அதற்காக பள்ளிக் கட்டணம் செலுத்த உண்டியலில் சேமித்து வைத்திருந்த 7 ஆயிரத்து 60 ரூபாய் பணத்தை வழங்க முடிவெடுத்தனர்.

இதையடுத்து பெற்றோருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ரேனே ஜோஸ்வா மற்றும் ஷெர்லி இருவரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து 7 ஆயிரத்து 60 ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினர். பள்ளி கட்டணத்திற்காக வைத்திருந்த உண்டியல் சேமிப்பை நிவாரண நிதிக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com