கடன் தொகைக்காக சிறுவனைக் கடத்தி படுகொலை செய்த கந்துவட்டி கொடூரன்

கடன் தொகைக்காக சிறுவனைக் கடத்தி படுகொலை செய்த கந்துவட்டி கொடூரன்
கடன் தொகைக்காக சிறுவனைக் கடத்தி படுகொலை செய்த கந்துவட்டி கொடூரன்

கன்னியாகுமரி அருகே கொடுத்த கடனை திரும்ப தராததால் 4 வயது சிறுவனைக் கடத்திச் சென்று தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரியை அடுத்த மீனவக் கிராமான ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கிய கெபின்ராஜ் - சரண்யா தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் ரெய்னா என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர்களது வீட்டின் அருகில் வசித்து வரும் உறவினரான அந்தோணிசாமி(40) என்பவரிடம் சரண்யா ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். பின்னர் கடனை திருப்பி செலுத்துவதில் சரண்யாவுக்கும், அந்தோணிசாமிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சரண்யா சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனால் அந்தோணிசாமி இவர்கள் மீது கோபத்தில் இருந்துள்ளார். அதன் காரணமாக இவர்களை பழிவாங்க நினைத்து குடும்பத்தினருடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்தச் சூழலில் சரண்யா நேற்று காலை முதல் தனது மகன் ரெய்னாவை எங்கு தேடியும் கிடைக்காததால் அவர்கள் கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் ஒரு ஆண்டிற்கு முன்பு கடன் வாங்கியது தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்தோணிசாமி தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்தோணிசாமியை தேடினர். அப்போது அவரது மொபைல் போன் சிக்னலை வைத்து அந்தோணிசாமி பாலக்காடு பகுதியில் ரயிலில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. 

இதனைத்தொடர்ந்து ரயில்வே போலீசாரின் உதவியுடன் அந்தோணிசாமியை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்தோணிசாமி நேற்று காலை 9 மணியளவில் சரண்யாவின் மகன் ரெய்னாவை பைக்கில் கொண்டு சென்று மணக்குடி என்ற தோப்பு பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவனை மூழ்கடித்து கொன்றதையும் ஒத்துக்கொண்டுள்ளார். 

இதனையடுத்து அந்தோணிசாமி கூறியபடி கன்னியாகுமரியை அடுத்த முகிலன்குடியிருப்பு கடற்கரை பகுதியில் உள்ள தனியார் தோப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் உடல் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலைசெய்யப்பட்டது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டது. கடனாக கொடுத்த பணத்திற்கு தாத்தா உறவு முறையில் இருக்கும் அந்தோணிசாமி 4 வயது சிறுவவைக் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பைக்கில் சிறுவனை அழைத்து சென்றதையும் ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் பார்த்துள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com