கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலைத் தோண்டி வேறு இடத்தில் அடக்கம்

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலைத் தோண்டி வேறு இடத்தில் அடக்கம்
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலைத் தோண்டி வேறு இடத்தில் அடக்கம்

கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறு அடக்கம் செய்யப்பட்டது. 

சென்னை அமைந்தகரையை பகுதியைச் சேர்ந்தவர் நரம்பியல் மருத்துவர் சைமன். இவர் கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை நடத்தி வந்தார். கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது இவரது உடலை அண்ணா நகரில் உள்ள வேலங்காடு சுடுகாட்டில் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி அடக்கம் செய்ய சென்ற போது அங்கிருந்த பொதுமக்கள் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை இங்கு புதைக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து கற்களை வீசி தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியது.

இது தொடர்பாக தகராறில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். காவல்துறை அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது. அதன் பிறகு மருத்துவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய போகும் போது அங்கு இருந்த டி.பி சத்திரம் பகுதியை சார்ந்த மக்கள் உடலை இங்கு அடக்கம் செய்ய கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் மாநகாரட்சி அதிகாரிகள் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய முடியவில்லை.

அதன் பிறகு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவரது உடல் அண்ணாநகரில் உள்ள வேலங்காடு சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது மனைவி ஆனந்தி கிறிஸ்தவ முறைப்படி தனது கணவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரியிடம் மனு அளித்தார். ஆனால் இந்த மனுவை பரிசீலித்த மாநகராட்சி ஆணையர் நிராகரித்து உத்தரவிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் ஆனந்தி சைமன் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் உத்தரவின் பேரில் கொரோனாவால் இறந்து போன மருத்துவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் இன்று காலை சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில் மருத்துவர் சைமன் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

கவச உடையணிந்து சென்று அவரது உடலை தோண்டி எடுத்து கிறிஸ்தவ முறைப்படி கீழ்ப்பாக்கம் கல்லறையில் அவரது உடல் பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றது. உடலை தோண்டி எடுக்கப்பட்ட பிறகு வாகனத்தில் வைத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. போலீஸ் பாதுகாப்போடு கொண்டு செல்லப்பட்டது.

அவரது மனைவி ஆனந்தி, அவரது மகன்கள் ஆண்டன், அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படியான சடங்குகள் நடத்தப்பட்டு கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மருத்துவர் சைமனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனையொட்டி அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com