ஏரியில் மிதந்த இளைஞரின் சடலம்: மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்
சேலம் அருகே ஏரியில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டதில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
சேலம் பூலாவரி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் புஷ்பா தம்பதியரின் மகன் கலையரசன் (25). இவர் கடந்த சில ஆண்டுகளாக ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் கலையரசன் காணாமல் போனதால் பெற்றோர்கள் தேடிவந்துள்ளனர்.
இதையடுத்து இரவு முழுவதும் வீடு திரும்பாத நிலையில், அடுத்தநாள் கலையரசனின் இருசக்கர வாகனம் ஏரியின் அருகே நிற்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏரிக்குள் கிடந்த கலையரசனின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கார்த்திக் என்ற இளைஞர் கலையரசனுடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது, பூலாவரி ஏரிக்குள் நேற்று மாலை இறங்கியதாகவும் பின்னர் கலையரசன் நீரில் மூழ்கி விட்டதாகவும் உடன் சென்ற கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சில, இரவு 8 மணியளவில் கலையரசன் கடைக்கு வந்ததை நேரில் பார்த்ததாகவும், அதற்கு முன்பாக அவருடன் உறவினர் ஒருவர் தொலைபேசியில் பேசியதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து கார்த்திக் கூறியதில் முரண்பாடு உள்ளதால் காவல்துறையினர் முறையாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் தனது மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதால் முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.