உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தம் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
வரும் 10ஆம் தேதி முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறி தமிழகம்-ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் “தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும்.
அது தமிழகத்தை நோக்கி வர அதிக வாய்ப்புள்ளது. புயல் முதலில் சென்னை நோக்கி நகரும் என்றும், சென்னையை தாக்கும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது. எந்த இடத்தில் கரையை கடக்கும் என ஓரிரு நாட்களில் தெரியவரும். மழையாக கரையை கடக்குமா அல்லது புயலாக கரையை கடக்குமா, காற்றழுத்த தாழ்வு பகுதியாக கடக்குமா, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்குமா என தெரியவில்லை. கரையை கடக்கும் இடத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளது.