201 9ஆம் ஆண்டிலும் உள்ளாட்சி தேர்தல் முடியாத நிலை ! உயர்நீதிமன்றம் அதிருப்தி
தமிழக உள்ளாட்சி தேர்தல் 2019ஆம் ஆண்டிலும் நடத்த முடியாத நிலை இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
காலக்கெடுவுக்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படாததால், மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகருக்கு எதிராக திமுகவின் ஆர்.எஸ். பாரதி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகினார். அப்போது, ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வார்டு மறுவரையறை பணிகள் முடிக்கப்படும், அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் என தெரிவித்தார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையம் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் கால அவகாசத்தை அரசு முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
ஆனால் அறிக்கை தாக்கல் செய்த பின்னர்தான் ஒப்புதலுக்கான காலகெடுவை நிர்ணயிக்க முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் தெரிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கபட்டுள்ளதாகவும், 2016ஆம் ஆண்டு நடத்த வேண்டிய தேர்தல் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் நடத்தப்படவில்லை எனக் கூறினார். இதேநிலை நீடித்தால் 2019ஆம் ஆண்டிற்குள் கூட தேர்தலை நடத்தமுடியாது என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதனையடுத்து மீண்டும் இன்று ஆக.14 வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது திமுக தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.