தொடர் வெள்ளப்பெருக்கு: கொள்ளிடம் ஆற்றின் 17-வது தூண் இடிந்து விழுந்தது

தொடர் வெள்ளப்பெருக்கு: கொள்ளிடம் ஆற்றின் 17-வது தூண் இடிந்து விழுந்தது
தொடர் வெள்ளப்பெருக்கு: கொள்ளிடம் ஆற்றின் 17-வது தூண் இடிந்து விழுந்தது

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் உடைந்த பழைய பாலத்தின் 17வது தூண் இன்று வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டது. பாலத்தின் 20வது தூண் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் அருகில் உள்ள புதிய பாலம் உடைந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள புதிய பாலம், மண் அரிப்பாலும்,அருகில் உள்ள  பழைய பாலத்தின் உடைப்பாலும் வலுவிழக்கும் நிலையை எட்டியுள்ளது. இதனை சீர்செய்ய தமிழக அரசு ரூ.6.28 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை தொடர்ந்து மண் அரிப்பை தடுத்து, புதிய  பாலத்தை பலப்படுத்தி,  பாதுகாக்கும் பணிகளை அதிகாரிகள் உடனடியாக  தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சென்னை நேப்பியர் பால வடிவில், ரூ.88 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய ஆற்றுப்பாலம், கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி திறக்கப்பட்டது. திருச்சி திருவானைகாவல் - நம்பர் ஒன் டோல்கேட் இடையியே ஸ்ரீரங்கத்தில் கொள்ளிடம் ஆற்றின் பழைய இரும்பு பாலத்தின் அருகே அமைந்துள்ள புதிய பாலத்தின் அடிப்பகுதியில், தற்போது  2அடி ஆழம் முதல் 12 அடி ஆழம் வரை மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய பாலம் வலுவிழக்கும் நிலைக்கும் வந்தது. இந்நிலையில் தற்போது இப்பாலத்தினை வினாடிக்கு 1.8 லட்சம் கன அடி தண்ணீர் கடந்து செல்கிறது.

இதனை சரிசெய்ய முதற்கட்டமாக ரூ.6.28 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில் மண் அரிப்பு ஏற்பட்ட புதிய பாலத்தின் 17 முதல் 21 வரையிலான தூண்களின்  முன்னும் , பின்னும் சில மீட்டர் தூரங்கள் வரை,  சுமார் 300 மீ நீளத்துக்கு அடித்தளத்தை பலப்படுத்தும் சிமெண்ட் படுக்கை (கான்கிரீட் தளம்) அமைக்கப்படவுள்ளது. எஞ்சிய தூண்களுக்களின் பக்க வாட்டில் (தேவைக்கு ஏற்ப 6.5 மீ ஆழம் முதல் 3 மீட்டர் ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டு) தடுப்புச்சுவர் மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது .

பழைய பாலம் அகற்றம்

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்களால் கடந்த 1928 ஆம் ஆண்டு இரும்பினால் கட்டப்பட்ட பழைய பாலம், கடந்த 25 ஆண்டுகால மண் அரிப்பால் வலுவிழந்தது. இந்த பாலத்தினை தாங்கி நின்ற 18 மற்றும் 19வது தூண்கள் , கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்டது . தற்போது இந்த பாலத்தை கடந்து செல்லும் வெள்ள நீர் 20 ஆவது துணை மூழ்கடித்து செல்கிறது. பழைய பாலத்தின் 17வது தூண் இன்று  வெள்ளநீரில் உடைந்து விழுந்து மூழ்கியது. பின்னர் பாலம் இருந்த தடையம் கூட இல்லாத வகையில் வெள்ளநீரில் பாலத்தின் ஒருபகுதி அடித்துச்செல்லப்பட்டது.

உடைந்துபோன பழைய பாலத்தினால், ஆற்றின்  நீரோட்டத்தில் தேக்கம் ஏற்பட்டு வந்தது. மேலும் பாலம் உடைந்த பகுதில் அதிகமாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சுமார் 40 அடி ஆழத்திற்கு மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் இருந்த புதிய பாலத்திற்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் எழுந்தது.

புதிய பாலத்தை பாதுகாக்கும் வகையில் பழைய பாலத்தை முற்றிலும் உடைத்து அப்புறப்படுத்த, தமிழக அரசு ரூ.3.10 கோடி நிதி ஒதுக்கியது. பாலத்தை இடிப்பதற்கான பூமி பூஜை (கடந்த 2022 ஜூன் 16 ஆம் தேதி) போடப்பட்டுள்ளது. இப்பணிகள் இன்னும் 6 மாத காலத்திற்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பழைய பாலத்தின் 17வது தூண் நீரில் அடித்து செல்லப்பட்டதால், போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு புதிய பாலத்தை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 10 வயது சிறுமிக்கு திருமண சான்றா?’.. பெற்றோருக்கு அதிர்ச்சி கொடுத்த வட்டவழங்கல் அலுவலர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com