கவிழ்ந்த லாரி - 10 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வீண்
சென்னை அருகே பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால்10000 லிட்டர் பெட்ரோல் வீணானது. 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. துறைமுகத்தில் இருந்து சென்னை கோடம்பாக்கம் பெட்ரோல் பங்கிற்கு 12000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரியில் பெட்ரோல் நிரப்பி கொண்டு அத்திப்பட்டு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது புதுநகர் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் மீது செல்லும் போது, முன்னே சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதில், பெட்ரோல் டேங்கர் லாரி, நிலைத்தடுமாறி மேம்பாலம் ஏறும் வழியில் தலைகீழாக விழுந்து உருண்டது. அப்போது அதில் இருந்த பெட்ரோல் ஆறாக சாலையில் ஓடியது. அதனை கண்ட அப்பகுதி மக்கள் கடைகளை அடைத்து விட்டு, அந்த இடத்தை விட்டு தப்பி ஓடினர்.
பின் பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர், பெட்ரோல் ஆறாக ஓடுவதை தவிர்க்க தண்ணீரை பீச்சி அடித்தனர்.எனினும் கட்டுப்படுத்த முடியாததால், எண்ணூர், மணலி, வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளிட்ட 5 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்து தண்ணீரில் நுரை கொண்டு அடித்தனர். மேலும், 2 கிரேன்கள் வர வழைக்கப்பட்டு, பெட்ரோல் டேங்கர் லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் டேங்கர் லாரி ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மீடகப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, இயல்பு நிலை திரும்பியது. இந்த விபத்தில் 10000 லிட்டருக்கும் மேலாக பெட்ரோல் வீணானது.இந்த விபத்து குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.