“இந்த அடிப்படை வித்தியாசத்தையே புரியாமல் ஆளுநர் நடந்துக்கொள்கிறார்”-தராசு ஷ்யாம் கருத்து

“சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் போதும், முடியும்போதும் தேசிய கீதம் படிக்கப்படவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து படிக்கப்பட்ட போது தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது” ஆளுநர் ரவி
தராசு ஷ்யாம் - ஆளுநர்
தராசு ஷ்யாம் - ஆளுநர்புதிய தலைமுறை

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் சபாநாயகர் அப்பாவு மற்றும் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். சட்டப்பேரவையை தொடங்கிவைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முழுவதுமாக படிக்காமல் வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம் எனக் கூறி தனது உரையை இரண்டு நிமிடங்களில் நிறைவு செய்தார்.

மேலும் அவர் சட்டப்பேரவையில் பேசும்பொழுது, “சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் போதும், முடியும்போதும் தேசிய கீதம் படிக்கப்படவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து படிக்கப்பட்ட போது தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் நம்மிடையே கூறுகையில்,

“ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு சட்டமன்ற விதிகளை விதித்துள்ளது. அதன்படிதான் அந்தந்த மாநில ஆளுநர்கள் செயல்படுவர். தமிழ்நாடு அரசு ஹவுஸ் ப்ரொசீஜர் என்பது முதலில் தமிழ்தாய் வாழ்த்து, இறுதியில் தேசியகீதம். தமிழ்த்தாய் வாழ்த்து படிக்கப்பட்ட போது தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் கூறுவது முதல் முறையில்லை. முதலில் தேசிய கீதம் வாசிக்கப்பட வேண்டும் என்று முன்பே ஒருமுறை கூறியிருக்கிறார். இப்படி எதையாவது கூறி ஆளுநர் ரவி சர்ச்சைகளின் நாயகனாக திகழ்கிறார். சர்ச்சைகளை கிளப்புவதற்கு என்று ஏதாவது ஒன்றை செய்கிறார்.

பேரவையில் சபாநாயகர் அப்பாவு - ஆளுநர் ஆர்.என்.ரவி
பேரவையில் சபாநாயகர் அப்பாவு - ஆளுநர் ஆர்.என்.ரவிபுதிய தலைமுறை
இந்த முறையும் அவர் ஆளுநர் உரையை வாசிக்க மாட்டார் என்றுதான் நாங்கள் எதிர்பார்த்தோம். அதுபோலவே அவரும் செய்துள்ளார்.

கவர்னரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இவர் மாநிலத்தின் அலங்கார தலைவர், கௌரவத் தலைவர். இந்த மாநிலத்தின் நலன்களை பாதுகாக்க, மரபுகளை பாதுகாக்க, கௌரவத்தை பாதுகாக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. அவரது பெயரில்தான் அரசியல் நடக்கிறது. இதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

இவருக்கு முன்பு இருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் ஆளுநராக இருந்த சமயம் இதுபோன்று எந்த பிரச்சனையிலும் அவர் ஆட்சேபனை தெரிவித்தது இல்லை.

ஏதோ ஒன்றை செய்து நடப்பு அரசுக்கு தொந்தரவு கொடுத்து, அதன்மூலம் மத்திய அரசை மகிழ்ச்சி படுத்த விரும்புகிறார். சொல்லப்போனால் பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சியை தடுப்பது இவர்தான். இப்படி தேவையற்ற சர்ச்சையை கிளப்புவதன் மூலமாக பாரதிய ஜனதா கட்சியை அவர் பின்னுக்கு தள்ளுகிறார். இதை இன்னும் மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com