
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் காரணமாக, இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களை ஆப்ரேஷன் அஜய் என்ற திட்டத்தின் மூலம் இந்திய அரசு மீட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தனர். அவர்களில் 8 பேர் மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் யாதவ் ஆகியோர் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் பகவதி செய்தியாளர்களிடம் கூறுகையில்.. ”இஸ்ரேலில் உள்ள பெர்லான் யுனிவர்சிட்டியில் இரண்டு ஆண்டுகளாக வேலை செய்கிறேன். அங்கு போர் சூழல் நிலவுவதால் அங்குள்ள இந்திய மாணவர்கள் தற்காலிகமாக இந்தியா திரும்பியுள்ளோம். அங்கு சூழல் சரியான பிறகு மீண்டும் அங்கு சென்று எங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளோம். நாங்கள் இருந்தது பாதுகாப்பான பகுதிதான். பெற்றோர்கள் பதட்டம் அடைவதால் தான் நாங்கள் இந்தியா திரும்பியுள்ளோம்.
மத்திய, மாநில அரசுகன் இணைந்து எங்களை இந்தியா அழைத்து வர சிறப்பாக ஏற்பாடுகளை செய்துள்ளார்கள். இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இஸ்ரேல் இந்திய உறவு மிகவும் சிறப்பாக உள்ளது. போர் பதற்றம் முடிந்த பிறகு நிச்சயம் மீண்டும் என்னுடைய ஆராய்ச்சியை அங்கு மேற்கொள்வேன். இஸ்ரேல் அரசாங்கமும் எங்கள் செயல்பாடுகள் குறித்து விசாரித்துக் கொண்டே இருந்தார்கள்.
எல்லையில் உள்ள தமிழர்கள் சற்று பதட்டமாக தான் உள்ளார்கள். மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள். இஸ்ரேலில் படிக்கும் இந்திய மாணவர்கள் ஆயிரம் பேர் இந்தியன் எம்பஸியுடன் தொடர்பில் உள்ளோம். சிறப்பான உதவியுடன் வந்துள்ளோம் எந்த குறையும் எங்களுக்கு இல்லை" என்றார்.
ஆராய்ச்சி மாணவி ஏஞ்சல் கூறுகையில்.. "போர் பதற்றம் காரணமாக அங்குள்ள மாணவர்களுக்கு சற்று மன அழுத்தம் அதிகமாக இருந்தது. பல்கலைக் கழகங்கள் வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்களுக்காக அவசர கால பயிற்சிகளை அளித்தனர். துப்பாக்கிச் சூடு சத்தங்களை கேட்கும் போது வரும் பதட்டங்கள் தான் இருந்ததே தவிர எந்தவித குழப்பமும் இல்லாமல் மத்திய மாநில அரசுகள் எங்களை அழைத்து வந்தனர். நான் மூளை சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதால் வீட்டிலிருந்து கம்ப்யூட்டர் மூலமாக வேலை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளார்கள்" என்றார்.