கைவிட்ட மகன்கள்... மண்தான் சாப்பாடே - வீட்டுச்சிறையில் வாழ்ந்த மூதாட்டி!

கைவிட்ட மகன்கள்... மண்தான் சாப்பாடே - வீட்டுச்சிறையில் வாழ்ந்த மூதாட்டி!
கைவிட்ட மகன்கள்... மண்தான் சாப்பாடே - வீட்டுச்சிறையில் வாழ்ந்த மூதாட்டி!

தஞ்சையில் உடுத்த உடை, உணவு கூட கொடுக்காமல் 2 மகன்களால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு மண்ணை தின்று வாழ்ந்த மூதாட்டியை சமூக நலத்துறை அலுவலர்கள் மீட்டனர்.

தஞ்சாவூர்  நாஞ்சிக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட காவேரி நகர் 5ம் தெரு வீட்டு மனை எண் 103ல் வயதான மூதாட்டி வீட்டு சிறையில் உள்ளார் என்ற தகவல் சமூக நல ஆர்வலர் ஜெயச்சந்திரன் என்பவருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு மனிதநேயம் என்பது இறந்து விட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு அந்த மூதாட்டியின் நிலை இருந்துள்ளது. உணவருந்தி பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்பது போல் ஆடையின்றி எலும்பும் தோலுமாக அவர் இருந்துள்ளார். மேலும் பசிக்கொடுமையால் மண்ணை அள்ளி  சாப்பிட்டுள்ளார். இதை வீடியோவாக எடுத்த சமூக நல ஆர்வலர் ஜெயச்சந்திரன் இதுகுறித்து வாட்ஸ் அப் வாயிலாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகாராக அனுப்பினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் பரவியது.


 
அந்த மூதாட்டி ஞானஜோதியின் கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். ஞானஜோதிக்கு இரு மகன்கள், ஒரு மகள். மகள்  சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய இரண்டு மகன்களில் மூத்த மகன் சென்னையில் காவல்துறை ஆய்வாளராக பணிபுரிகிறார் என்றும், இரண்டாவது மகன் பட்டுக்கோட்டையில் வசிக்கிறார். அவர் தூர்தர்ஷனில் பணியாற்றுபவர் என்றும், இவர்கள்  இருவரும் தாயை கவனிக்காமல் வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர், இதனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக மாறியுள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்படி சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த மூதாட்டியின் பெயர் ஞானஜோதி (62) என்பதும், மூத்த மகன் சண்முகசுந்தரம், இளைய மகன் வெங்கடேசன் என்பதும் தெரிய வந்தது.



தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் பாதுகாப்புடன் சென்ற சமூக நலத்துறை குழுவினர், வீட்டில் வைத்து பூட்டப்பட்டிருந்த ஞானஜோதியை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பெற்ற தாயை கவனிக்காமல் விட்ட மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com