செய்தியாளர்: ந.காதர்உசேன்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியயைக்கு கடந்த சில மாதங்களாக முறையாக ஊதியம் வழங்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் பள்ளியின் தாளாளரான மாதவனிடம் முறையிட்டுள்ளதாக தெரிகிறது.
அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியரான ரஞ்சிதாவை பணியிலிருந்து விலகுமாறு, பள்ளியின் தாளாளர் வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து அவர் பணியில் இருந்து நின்றுவிட்டார். மேலும் பணி செய்த காலத்திற்கான ஊதியத்தை வழங்குமாறு கேட்டுள்ளார். அப்போது பள்ளியின் தாளாளர் மாதவன் 20-ஆம் தேதி பள்ளிக்கு வாருங்கள் ஊதியத்தை தருவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அன்றைய தினம் ஆசிரியை பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது பள்ளியின் நுழைவாயிலில் நின்றிருந்த தாளாளர், ஆசிரியையின் கணவரை கம்பால் அடித்து விரட்டியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தாளாளர் தரப்பிலும் ஆசிரியை தரப்பிலும் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.