தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் - சிவ கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
செய்தியாளர்: ந.காதர்உசேன்
தஞ்சை பெரிய கோயில் சித்திரை பெருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் கலை, நாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை துவங்கியது.
தஞ்சை மேல வீதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், தியாகராஜ சுவாமி - கமலாம்பாள் எழுந்தருளிய நிலையில், சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
இதையடுத்து சிவ கோஷத்துடன் தாரை தப்பட்டை, நாதஸ்வர இசையுடன் பாரம்பரிய இசை முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ராஜ வீதிகளின் வழியாக செல்லும் தேர், மீண்டும் மேல வீதியில் நிலைக்கு வரவுள்ளது. இந்நிகழ்ச்சியை காண திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.