“ஆட்டோ மாமா நாங்க வந்துருக்கோம் கண்ண திறங்க” - மழலைகளின் பாச அஞ்சலி
உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பள்ளிக் குழந்தைகள் கண்ணீர் செலுத்தி பாச அஞ்சலி அனைவரையும் கலங்கச் செய்தது.
தஞ்சாவூர் சுங்காந்திடல் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். ஆட்டோ ஓட்டுநரான இவர் காலை, மாலை என இரு நேரங்களிலும் பள்ளிக் குழந்தைகளை பள்ளியில் விடுவது, அழைத்து வருவது எனப் பணியாற்றி வந்தார். இவர் ஆட்டோ மூலம் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு சென்று வந்தனர். குழந்தைகளுடன் பாசத்துடன் பழகி வந்த இவர், வருமானத்திற்காக அளவுக்கு அதிகமான குழந்தைகளை தனது ஆட்டோவில் ஏற்றிச் செல்லமாட்டார். காலை நேரத்தில் எப்போதும் சாக்லெட் வைத்திருப்பார். பள்ளிக்குச் செல்ல அடம் பிடிக்கும் குழந்தைகளை சாக்லெட் கொடுத்து, சமாதானம் செய்து அழைத்து செல்வார்.
ஆட்டோவில் வரும் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால், பெற்றோர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வார். இதனால் குழந்தைகள் முதல் பெற்றோர் வரை அனைவரிடமும் நன் மதிப்பை பெற்று விளங்கினார். இவரை பள்ளிக்குழந்தைகள் ‘டிரைவர் மாமா’ எனப் பாசத்துடன் அழைத்து வந்தனர். இந்த நிலையில் கதிர்வேலுக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக சிறு நீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். அதுவரை பள்ளிக் குழந்தைகளுக்கு மாற்று டிரைவர் ஏற்பாடு செய்திருந்தார். சிகிச்சையால் கதிர்வேலில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் கடந்த 19ஆம் தேதி இறந்துவிட்டார்.
கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினர். அப்போது பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லாமல், நேராக கதிர்வேல் உடலுக்கு அஞ்சலி செலுத்து பள்ளிக்குழந்தைகள் வந்திருந்தனர். அப்போது ஒரு குழந்தை கண்ணீருடன், “ஆட்டோ மாமா நாங்க எல்லோரும் வந்திருக்கோம் கண் திறந்து பாருங்க” என அழுதது. மற்ற குழந்தைகள் கண்ணாடி பெட்டிக்குள் இருந்த அவரின் உடலை பார்த்து, “எங்களுக்கு இனிமேல் நீங்க ஆட்டோ ஓட்ட வரமாட்டிங்களா” என்றது அங்கிருந்த அனைவரது கண்களும் ஈரமானது.
சில குழந்தைகளின் பெற்றோர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த கதிர்வேலுக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். அத்துடன் 3ஆம் வகுப்பு படிக்கும் தேஜாஸ்ரீ என்ற மகளும், 2ஆம் வகுப்பு படிக்கும் ரித்திகா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். அவரது மறைவால் இந்தக் குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.